×

தேனி விவிஐபி பெயரை சொல்லி மணல் மூலம் கோடிகளை அள்ளி குவித்த அதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, வசூல் வேட்டையில் கொடி கட்டி பறக்கும் அதிகாரி பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை மாவட்ட குடிமைப்பொருள் பறக்கும் படையில் கடந்த 5 ஆண்டாக வருவாய் ஆய்வாளராக  இருந்த ஒருவர், பல லகரங்களை குவித்து விட்டாராம். மாவட்ட உயரதிகாரியின் நேர்முக உதவியாளருக்கு கொடுக்கவேண்டும் எனக்கூறி தான் வசூலை அள்ளினாராம். இவரது மேலதிகாரியான மாவட்ட வழங்கல் அலுவலர், அலுவலக பணி நிமித்தமாக சென்னை செல்லும்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துகொடுப்பது என அனைத்து உதவிகளையும் இவரே செய்து கொடுப்பாராம். அதிகாரிகளை நன்றாக கவனித்து வந்ததால் பல ஆண்டுகளாக இதே பிரிவில் இருந்தாராம். ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, இவரது குட்டு வெளிப்பட்டு விட்டதால், இவரை மேட்டுப்பாளையம் தாலுகாவுக்கு அதிரடியாக  இடமாற்றம் செய்து, மாவட்ட உயரதிகாரி உத்தரவு பிறப்பித்தார். பணியில் சேராமல் விடுப்பிலேயே இருந்து வந்தாராம். இதற்கிடையில் குடிமைப்பொருள் பறக்கும் படை வருவாய் ஆய்வாளராக இன்னொரு நபர்  நியமிக்கப்பட்டார். அவர், பதவியேற்ற உடனேயே 45 நாள் பயிற்சிக்காக சென்றுவிட்டார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பழைய ஆய்வாளர்,  கோதாவில் குதித்து விட்டார். ‘நான் இன்னும் பணியில் தொடர்கிறேன்.  எப்போதும்போல் எனக்குத்தான் மாமூல் கொடுக்க வேண்டும்’’ என ரேஷன்கடை ஊழியர்களை மிரட்ட துவங்கியுள்ளார். வால்பாறையில் இருந்து ஒரு ஜீப்  வரவழைத்து, அதில் டிரைவர் ஒருவரை நியமித்து, அந்த ஜீப்பில் வசூலுக்கு  சென்று வருகிறார். கடந்த வாரம், மாவட்ட வழங்கல் அலுவலர், அலுவல் நிமித்தமாக  சென்னை சென்றபோது, இவரே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்துள்ளாராம்.  மாவட்ட உயரதிகாரியால் இடமாற்றம் செய்யப்பட்ட ஒரு நபர், வசூல் வேட்டையில் குளிப்பது பாதிக்கப்பட்ட ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘பழைய பதவி ஆசையால் கட்சி மாறியும் மீண்டும் மேயர் பதவிக்கு குறிவைக்கும் நபரை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு விரைவில் வரும்னு பேச்சு அடிபடுது. அதற்கேற்ப எல்லா கட்சிகளும் தயாராகிட்டு வர்றாங்க. இதுல வெயிலூரில் கடந்த முறை இலை கட்சியை சேர்ந்த அம்மணி மேயரா பொறுப்பு வகிச்சாங்களாம். இப்ப அந்தம்மா தாமரைல ஐக்கியமாயிட்டாங்க. அதனால, மேயர் பதவிக்கு இலை கட்சியில கர்ணமானவரு மகளுக்கு சீட் கிடைக்கும்னு பேச்சு அடிபடுதாம். அந்த பேச்சுக்கு இப்ப முட்டுக்கட்டை விழுந்துடுமோன்னு இலை கட்சிக்காரங்க வருத்தப்படறாங்களாம். அதுக்கான முயற்சியில லோக்கல் தாமரைங்க இறங்கியிருக்காம். அதுக்கு சமீபகாலமா தாமரை கட்சி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்ல கூட்டம் அதிகமா சேருதுனு காரணம் சொல்றாங்களாம். அதனால மேயர் பதவிக்கு ஏற்கனவே பொறுப்பில் இருந்த அம்மணியோ அல்லது வேறு யாரையாவது நிக்க வைக்க தாமரை கட்சியில முயற்சி நடக்குதாம்… எனினும் இலையின் மாநகர தலைகள், தாமரைக்கோ, நம்ம கட்சிக்கு துரோகம் செய்துட்டு போன அம்மணிக்கோ சீட் கொடுத்தால்… நாங்கள் தேர்தல் வேலை செய்ய மாட்டோம்னு முரண்டு பிடிக்கிறார்களாம். இதனால் இலை தலைமை வெயிலூர் நமக்குதான் போய் வேலையை பாருங்க என்று டானிக் வார்த்தை சொல்லி அனுப்பி இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தேனி விவிஐபி பெயரை சொல்லி கில்லியாக கரன்சி குவிக்கும் அதிகாரி யாரு… எந்த மாவட்டத்தை சேர்ந்தவரு…’’ விசாரித்தார் பீட்டர் மாமா.‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் மரியாதை பெயரில் துவங்கும் தாலுகாவில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சாமி பெயரில் முடியும் பெயர் கொண்ட தாலுகா துணை அதிகாரியானவர், கடந்த 8 வருடமாக ஒரே தாலுகாவில் பணியாற்றி வந்தார். இலைக்கட்சி காலத்தில் மாஜி துணை விவிஐபிக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என கூறிக்கொண்டார். இலைக்கட்சிக்கார்களான மணல் கடத்தல் புள்ளிகளுடன் கைகோர்த்துக் கொண்டு, மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் சம்பாதித்தார். மாவட்ட நிர்வாகமும் இவரைக் கண்டுகொள்ளவில்லை. இலைக்கட்சி காலத்தில் அரசியல் செல்வாக்கோடு அதிகாரிகளுக்கு கப்பம் கட்டிக் கொண்டு இதே தாலுகாவில் தொடர்ந்து பணியாற்றி வந்தவர், தற்போது பதவி உயர்வில் வேறு தாலுகாவிற்கு மாற்றப்பட்டார். ஆனால், அங்கு பணியில் சேராமல் தொடர் விடுப்பில் மீண்டும் இதே தாலுகாவிற்கு வர கடும் முயற்சியில் இருக்கிறாராம். இந்த தாலுகாவில் பணியில் உள்ள அதிகாரி ஓராண்டு பணி முடித்து விட்டதால் இன்னும் ஒரு சில மாதத்திற்குள் வேறு பணிக்கு மாற்றப்படலாம். அதுவரை விடுமுறையில் இருந்து விட்டு, மீண்டும் இதே தாலுகாவுக்கு வர தீவிர முயற்சியில் இறங்கியுள்ளாராம். துணையாக இருந்தபோதே மணல் கொள்ளையர்களோடு கைகோர்த்தவர், தலைமைக்கு வந்தால் இந்த தாலுகா பாலைவனமாகும் என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள். தேனி விவிஐபி பெயரை சொல்லி இன்னும் எத்தனை காலம் கரன்சி குவிப்பார்னு பார்க்கலாம் என்று அதே தாலுகாவில் பணியாற்றும் ஊழியர்கள் புலம்பி தள்ளுகின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post தேனி விவிஐபி பெயரை சொல்லி மணல் மூலம் கோடிகளை அள்ளி குவித்த அதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Theni ,Uncle ,Peter ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்