×

151 ரன் வித்தியாசத்தில் கர்நாடகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழகம்: விஜய் ஹசாரே டிராபியில் அசத்தல்

ஜெய்பூர்: விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் அரையிறுதியில் விளையாட தமிழக அணி தகுதி பெற்றுள்ளது. கே.எல்.சைனி மைதானத்தில் நேற்று நடந்த காலிறுதியில் தமிழகம் – கர்நாடகா அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடகா அணி கேப்டன் மணிஷ் பாண்டே முதலில் பந்துவீச முடிவு செய்தார். பாபா அபராஜித், நாராயண் ஜெகதீசன் இருவரும் தமிழக இன்னிங்சை தொடங்கினர். அபராஜித் 13 ரன் எடுத்து வெளியேற, அடுத்து ஜெகதீசனுடன் சாய் கிஷோர் இணைந்தார். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 147 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது.சாய் கிஷோர் 61 ரன் (71 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி கரியப்பா பந்துவீச்சில் பிரசித் கிரிஷ்ணா வசம் பிடிபட்டார். அடுத்து ஜெகதீசன் – தினேஷ் கார்த்திக் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்தனர். அபாரமாக விளையாடி சதம் அடித்த ஜெகதீசன் 102 ரன் (101 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். தினேஷ் கார்த்திக் 44 ரன் (37 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் விஜய் ஷங்கர் 3 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பாபா இந்திரஜித் – ஷாருக் கான் ஜோடி 6வது விக்கெட்டுக்கு அதிரடியாக ரன் குவிக்க, தமிழக ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பிரசித் வீசிய 46வது ஓவரில் இந்திரஜித் (31 ரன், 24 பந்து, 3 பவுண்டரி), வாஷிங்டன் சுந்தர் (0), மணிமாறன் சித்தார்த் (0) ஆட்டமிழக்க, தமிழக அணி 290 ரன்னுக்கு 8வது விக்கெட்டை இழந்தது.ஒரு முனையில் ரகுபதி சிலம்பரசனை சும்மா நிற்க வைத்து! எஞ்சிய 4 ஓவரையும் சிறப்பாக எதிர்கொண்ட ஷாருக் கான், பவுண்டரியும் சிக்சருமாக விளாசி கர்நாடகா பந்துவீச்சை சிதறடித்தார். அவரது விஸ்வரூபத்தால் தமிழக அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 354 ரன் குவித்தது. ஷாருக் கான் 79 ரன் (39 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்), சிலம்பரசன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கர்நாடகா பந்துவீச்சில் பிரவீன் துபே 3, பிரசித் 2, விஷாக், கரியப்பா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 355 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கர்நாடகா, சிலம்பரசன் – வாஷிங்டன் சுந்தர் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 39 ஓவரிலேயே 203 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரோகன் கடம் 24, சித்தார்த் 29, மனோகர் 34, ஷரத் 43, துபே 26 ரன் எடுக்க, கேப்டன் பாண்டே உள்பட மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். தமிழக பந்துவீச்சில் சிலம்பரசன் 4, சுந்தர் 3, சந்தீப், சாய் கிஷோர், சித்தார்த் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 151 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியது. * இமாச்சல பிரதேசம் தகுதிவிஜய் ஹசாரே டிராபி முதல் காலிறுதியில் உத்தர பிரதேசம் – இமாச்சல பிரதேசம் நேற்று மோதின. ஜெய்பூர், சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இமாச்சல் முதலில் பந்துவீச, உத்தர பிரதேசம் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்தது. அபிஷேக் 17, அக்‌ஷ்தீப் 32, ரிங்கு சிங் 76, புவனேஷ்வர் குமார் 46 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இமாச்சல் அணி 45.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்து வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரோரா 19, பிரஷாந்த் சோப்ரா 99 ரன் (141 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), நிகில் கங்தா 58 ரன் விளாசினர். …

The post 151 ரன் வித்தியாசத்தில் கர்நாடகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழகம்: விஜய் ஹசாரே டிராபியில் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Karnataka ,Vijay Hazare ,Jaipur ,Vijay Hazare Cup ODI series ,KL Saini ,Dinakaran ,
× RELATED தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது...