மானாமதுரை: மானாமதுரை-மன்னார்குடி வரை இயக்கப்பட்ட பயணிகள் டெமு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார்குடியில் இருந்து மானாமதுரை வரை ெடமு ரயில் கடந்த 2011ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலுவின் முயற்சியால் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் மன்னார்குடியில் இருந்து காலை 6:30 மணிக்கு புறப்பட்டு நீடாமங்கலம், தஞ்சாவூர், பொன்மலை, வழியாக திருச்சிக்கு காலை 9:10க்கு வரும். மீண்டும் திருச்சியிலிருந்து காலை 10:15 மணிக்கு புறப்பட்டு கீரனூர் புதுக்கோட்டை காரைக்குடி சிவகங்கை வழியாக மானாமதுரைக்கு மதியம் 1:20 க்கு வந்து மறு மார்க்கமாக மானாமதுரையில் இருந்து மதியம் 2:15 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி வழியாக மன்னார்குடிக்கு இரவு 8:15 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயிலை பொதுமக்கள் மாணவர்கள் என பலர் பயன்படுத்தி வந்தனர்.மானாமதுரை சந்திப்பில் இருந்து மதுரை, விருதுநகர், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வரும் பயணிகள், காரைக்குடிக்கு வந்து செல்ல ஏதுவாக இந்த ரயில் இருந்தது. அதே போல திருச்சியில் இருந்து கரூர், குளித்தலை, சிரிரங்கம், அரியலூர், விருத்தாசலம், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை போன்ற பகுதிகளுக்கு இணைப்பு ரயில்களும் உள்ளதால் இந்த ரயில் டெல்டா மாவட்டங்களில் உள்ள எந்த ஊர்களுக்கும் செல்லலாம். கடந்த 8 மாதங்களாக இந்த ரயில் மானாமதுரை வரை செல்லாமல் காரைக்குடி வரை மட்டுமே வந்து செல்கிறது. இதனால் இந்த ரயிலை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் மீண்டும் பஸ்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆகவே மீண்டும் மானாமதுரை வரை ரயிலை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து ரயில்பயணி சண்முகம் கூறுகையில், ‘‘மானாமதுரை மன்னார்குடி ரயில் காரைக்குடி மானாமதுரை இடையே லைன் ப்ளாக் எனும் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது பணிகள் முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் நிறுத்தப்பட்ட ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த ரயிலை மீண்டும் இயக்க திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் பரிந்துரை செய்ய வேண்டும்.’’ என்றார்.
The post மானாமதுரை-மன்னார்குடி ரயில் மீண்டும் இயக்கப்படுமா?: பயணிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.