பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் கால்வாய்கள் செடி, கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், கடைமடை நிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அணையின் கிழக்கு கரை கால்வாய் பாசனத்தில், பள்ளிபாளையம் பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் நெல்நடவு செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ம் தேதி கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படும்.
இந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பியதால், வழக்கமான தேதியை விட ஒரு நாள் முன்னதாகவே, கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததால், கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் ஏற்பட்ட கனமழையால் அங்குள்ள கேஆர்எஸ், கபினி அணைகள் நிரம்பி, சுமார் 2 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கிழக்குகரை கால்வாய் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது கால்வாய் பாசனத்திற்காக இடது மற்றும் வலது கால்வாய்களில் 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கடைமடையான பள்ளிபாளையம் பகுதிக்கு வந்தடைய 5 நாட்களாகும்.
கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சுமார் 20 நாட்களாகியும், பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள வயல்களுக்கு தண்ணீர் வரவில்லை. களியனூர், இளையாம்பாளையம் பகுதியில் உள்ள சுமார் 200 ஏக்கருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக கால்வாய் தூர்வாரப்படாததால் தான், தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். களியனூர், இளையாம்பாளையம் பகுதியில் பிரதான கால்வாய்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் நீரின் வேகத்தை தடை செய்துள்ளதால், தண்ணீர் தேங்கி நிற்கிறது. கிளை கால்வாய்களும் தூர்ந்துபோய் வயல்களுக்கு செல்லாமல் ஓடையில் கலந்து ஆற்றுக்கு செல்கிறது.
வயல்களுக்கு தண்ணீர் கிடைக்காததால் வயலடித்தல், நாற்று விடுதல் போன்ற பணிகள் ஏதும் நடைபெறவில்லை. கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் 137 நாட்களுக்குள், சாகுபடி பணிகளை முடிக்க முடியுமா என்ற கவலை விவசாயிகளுக்கு எழுந்துள்ளது. எனவே, நீர் செல்லாமல் தேங்கியுள்ள கால்வாய் பகுதிகளில், பொதுப்பணித்துறை உடனடியாக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் புதர்கள், செடிகளை அகற்றி கரைகளை வலுப்படுத்தி பாசன நீர் வயல்களுக்கு முழுமையாக கிடைக்க வழி செய்ய வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரடியாக வயல்களை பார்வையிட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பள்ளிபாளையத்தில் கால்வாய் அடைப்பால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் தாமதம்: ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.