கொல்கத்தா: ஜப்பானில் உள்ள நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டுமென அவரது பேரன் சந்திர குமார் போஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கடந்த 1945ம் ஆண்டு ஆகஸ்டில் ஜப்பான் ராணுவ விமானத்தில் தைவான் செல்லும் வழியில் விமான விபத்தில் இறந்ததாக நம்பப்படுகிறது. அவரது அஸ்தி ஜப்பானில் உள்ள ரெங்கோஜி கோயிலில் பாதுகாக்கப்படுகிறது. இந்த அஸ்தியை இந்தியா கொண்டு வர வேண்டுமென நேதாஜியின் குடும்பத்தினர் ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நேதாஜியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட உள்ளது.
இதையொட்டி, நேதாஜியின் பேரன் சந்திர குமார் போஸ் பிரதமர் மோடிக்கு நேற்று எழுதிய கடிதத்தில், ‘‘நேதாஜியின் நினைவுநாளையொட்டி, ரெங்கோஜியில் உள்ள அவரது அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டுமென மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன். நேதாஜியின் அசாதாரண தைரியம், தன்னலமற்ற சேவை, சுதந்திரத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவை இந்தியர்கள் மட்டுமின்றி உலகெங்கிலும் சுதந்திரத்தை விரும்பும் மக்கள் மனதில் அவரை நாயகனாக்கி உள்ளது. நேதாஜி மரணம் தொடர்பான ஆவணங்களை பொது வெளியில் வெளியிட்டதன் மூலம், பல தவறான விஷயங்களுக்கு இந்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதே போல, நேதாஜியின் அஸ்தியையும் தாய்நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்’’ என வலியுறுத்தி உள்ளார்.
The post ஜப்பானில் உள்ள நேதாஜியின் அஸ்தியை கொண்டு வர வேண்டும்: பிரதமர் மோடிக்கு பேரன் கடிதம் appeared first on Dinakaran.