சென்னை: புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இஒஎஸ்-08 உடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இஒஎஸ்-08 செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் 3, ஆதித்யா எல் 1 ஆகிய விண்வெளி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இது போன்ற பெரிய திட்டங்களை ஒரு பக்கம் செயல்படுத்தினாலும் வானிலை ஆராய்ச்சி, புவி கண்காணிப்பு ஆகிய பணிகளுக்காக செய்ற்கைகோள்களை ஏவி வருகிறது. அந்தவகையில் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இஒஎஸ்-8 செயற்கைகோளை எஸ்எஸ்எல்வி-டி3 சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் மூலம் ஏவ திட்டமிடப்பட்டது. அதை தொடர்ந்து செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டு எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுடன் செயற்கைக்கோள்களை பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட அனைத்து ஆயத்த பணிகளும் முடிக்கப்பட்டு விண்ணில் செலுத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த ராக்கெட் ஏவுதலுக்கான 6 மணி நேர கவுன்டவுன் நேற்று அதிகாலை 3.17 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்று காலை 9.17 மணிக்கு எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. திட்டத்தின் முதன்மை செயற்கைக்கோளான 32 மீட்டர் உயரம், 175 கிலோ எடை கொண்ட இஓஎஸ் -08 செயற்கைக்கோள் ராக்கெட் ஏவப்பட்ட 13 நிமிடம் 38 விநாடிகளில் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அடுத்த 3வது நிமிடத்தில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் எஸ்ஆர்-0 டெமோசாட் என்ற 200 கிராம் எடைகொண்ட சிறிய சோதனை செயற்கைக்கோளும் நிலை நிறுத்தப்பட்டது.
இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் பூமியில் இருந்து 475 கி.மீ. தொலைவில் உள்ள புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இஓஎஸ்- 08 செயற்கைக்கோளில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்பராரெட் பேலோடு (இஓஐஆர்), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிபிளக்டோமெட்ரி பேலோட் (ஜஎன்எஸ்எஸ்-ஆர்) மற்றும் எஸ்ஐசி யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வு கருவிகள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த கருவிகளின் பணிக்காலம் ஓர் ஆண்டாகும். மேலும் இந்த செயற்கைக்கோளில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இஒஐஆர் கருவி, செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு, பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவும் பகலும், மிட்-வேவ் ஐஆர் (எம்ஐஆர்) மற்றும் லாங்-வேவ் ஐஆர் (எல்விஐஆர்) பேண்டுகளில் படங்களை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. எரிமலை செயல்பாடு கண்காணிப்பு மற்றும் தொழில்துறை மற்றும் மின் நிலைய பேரிடர் கண்காணிப்பு ஆகியவை இந்த கருவியின் செயல்பாடாகும். ஜஎன்எஸ்எஸ்-ஆர் கருவி கடல் பரப்பு காற்று, நில ஈரப்பதம், இமயமலை பகுதிகளில் பனிப்பொழிவு, வெள்ள தடுப்பு ஆகியவை கண்காணிக்க தரவுகள் சேமிக்கப்படும். இவை தவிர மிக முக்கியமாக எஸ்ஐசி யுவி டோசிமீட்டர் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு பயன்படவுள்ளது.
ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்கள் இருக்கும் இடமான குரு மாட்யூலில் பகுதியில் யுவி கதிர்களை கண்காணித்து எச்சரிக்கை செய்ய ஆலாரம் சென்சாராக பயன்படுத்தப்படவுள்ளது. செயற்கைக்கோளுக்கு ஏற்ப ஆராய்ச்சி கருவிகளை உருவாக்குவது மற்றும் எதிர்காலத்தில் செயல்படும் செயற்கைக்கோள்களுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை இணைப்பது, புதிய பெருமுகக் கணிப்பொறி தொழில்நுட்பங்களுடன் நுண் செயற்கைக்கோள்களை வடிவமைப்பது மற்றும் உருவாக்குவது ஆகியவை இந்த இஓஎஸ்-08 செயற்கைகோளின் முதன்மை நோக்கம். செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட பின் விஞ்ஞானிகள் கரகோஷங்களை எழுப்பியும், ஒருவருக்கொருவர் கைகொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது, திட்ட இயக்குநர் உட்பட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
* வரும் நாட்களில் தனியாருக்கு எஸ்எஸ்எல்வி ராக்கெட் தொழில்நுட்பம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் நிருபர்களிடம் கூறியதாவது: எஸ்எஸ்எல்வி -டி3 ராக்கெட் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை அடுத்து, இனி வணிகரீதியாக செயல்படுத்தப்படும், இந்த தொழில்நுட்பம் தனியாருக்கு வழங்கப்படும். தொழில்நுட்பம் பரிமாற்றம் தொடர்பாக பல நிறுவனங்களிடம் கருத்து கேட்கப்பட்டது. எதிர்பார்த்ததை விட பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டினர். அதில் தகுதியான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுடன் தொழில்நுட்ப பரிமாற்றம் நடைபெறும். தனியார் நிறுவனங்களின் வணிக ரீதியான செயற்கைக்கோள்கள் இனி என்எஸ்ஐஎல் நிறுவனம் மூலம் ஏவப்படும். உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த தொழில்நுட்பம் வழங்கப்படும்.
எஸ்எஸ்எல்வி -டி3 ராக்கெட் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள் விண்வெளியில் புற ஊதா கதிர்கள், காமா கதிர்கள் விண்வெளியில் எப்படி இருக்கிறது என்பதை கண்டறிந்து தகவல் தெரிவிக்கும். இது ககன்யான் திட்டத்திற்கு உதவியாக இருக்கும். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும். அதற்கு முன்னதாக ஆளில்லா திட்டம் (unmanned mission) டிசம்பரில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்திற்கான ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வந்தடைந்துள்ளது. ஒருங்கிணைப்பு பணிகள் அடுத்த சில மாதங்களில் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது திட்ட இயக்குனர் வினோத் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜராஜன், அவினாஷ், சங்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோள்: ஏவப்பட்ட 13 நிமிடங்களில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது; கரகோஷம் எழுப்பி விஞ்ஞானிகள் மகிழ்ச்சி; இஸ்ரோ தலைவர் பாராட்டு appeared first on Dinakaran.