×
Saravana Stores

டெல்லி சுதந்திர தின விழாவில் ராகுல் காந்திக்கு இடம் ஒதுக்கிய விவகாரம்; ஒன்றிய பாஜ அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: டெல்லியில் சுதந்திர தின விழாவில் ராகுல் காந்திக்கு இடம் ஒதுக்கிய விவகாரத்தில் ஒன்றிய பாஜ அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு, கடைசி வரிசைக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கி ஒன்றிய பாஜ அரசு அவமதித்துள்ளது.

இதற்கு விளக்கம் அளிக்கிற பாதுகாப்பு அமைச்சகம் ஒலிம்பிக் வீரர்களை கவுரவப்படுத்த, அவர்களை முன் வரிசையில் அமர்த்தியதால் இந்த நிகழ்வு ஏற்பட்டதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்றிய கேபினட் அமைச்சர்களாக இருக்கிற ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்பது கேபினட் அமைச்சர்களுக்கு இணையான பதவியாகும். அந்த வகையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் அருகில் இடம் ஒதுக்காமல் பின் வரிசையில் இடம் ஒதுக்கியிருப்பது உள்நோக்கம் கொண்டதாகும். அதேபோன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு 5வது வரிசையில்தான் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மிகுந்த எழுச்சியோடு ஆற்றல் மிக்கவராக ராகுல் காந்தி செயல்படுவதை சகித்து கொள்ள முடியாத மோடி அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்தகைய மலிவான செயல்களில் ஈடுபட்டு வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

The post டெல்லி சுதந்திர தின விழாவில் ராகுல் காந்திக்கு இடம் ஒதுக்கிய விவகாரம்; ஒன்றிய பாஜ அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi Independence Day ,Union ,Bahia government ,CHENNAI ,BAJA ,INDEPENDENCE DAY FESTIVAL ,DELHI ,Tamil Nadu Congress ,President ,Selvapperundagai ,Independence Day ,EU Bharatiya Rada ,BJP government ,Dinakaran ,
× RELATED “நிறம் முக்கியமில்லை, என்ன...