கடலூர்: திரைப்பட இயக்குனர் சேரன் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி நேற்று முன்தினம் காரில் வந்தபோது, பின்னால் தனியார் பேருந்து ஒன்று மற்றொரு பேருந்துடன் போட்டி போட்டு அதிக ஒலியுடன் ஹாரனை டிரைவர் தொடர்ந்து அடித்து உள்ளார். இதனால் கடுப்பான சேரன் அந்த தனியார் பேருந்தை வழிமறித்து டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு விதிகளை மீறிய தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர்.
இதற்கிடையே சமூக வலைதளங்களில் இயக்குனர் சேரன் மீது காவல்துறையில் ஆன்லைன் புகார் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக கடலூர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் டாக்டர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இயக்குனர் சேரன் கூறிய அறிவுரைகளை கருத்தில் கொண்டு சங்க உறுப்பினர்களுக்கு அறிவுரை கூறப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க காவல் துணை காணிப்பாளரிடம் கோரிக்கை தான் வைக்கப்பட்டது. இயக்குனர் சேரன் மீது குறிப்பிட்டு எந்த புகாரும் அளிக்கவில்லை. மாறாக எங்கள் மீது போடப்படும் வழக்கை நிறுத்துமாறுதான் கோரிக்கை வைத்தோம்’ என குறிப்பிட்டுள்ளனர்.
The post இயக்குனர் சேரன் மீது போலீசில் புகாரா?: பஸ் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் appeared first on Dinakaran.