சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 6 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. உ.பி. மாநிலம் லக்னோவை சேர்ந்த சுமார் 45 வயது தனியார் பள்ளி ஊழியர் டெல்லி செல்ல வந்தார். அவருடைய கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்த போது, கைப்பையில் வெடிகுண்டு இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. பாதுகாப்பு அதிகாரிகள், கைப்பையை எடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திறந்து பார்த்தனர்.
அதில் 8 எம்எம் ரக துப்பாக்கி குண்டுகள் 3 இருந்தன. அது உபயோகப்படுத்தப்பட்ட குண்டுகள் என்பதும் தெரியவந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் குண்டுகளை பறிமுதல் செய்தனர். அவரது டெல்லி பயணத்தை ரத்து செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பயணி, தான் உ.பி. தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றுவதாகவும், தனது மகன் சென்னையில் ஒரு கல்லூரியில் படிப்பதால் அவரை பார்த்து விட்டு செல்வதற்காக, சென்னைக்கு வந்து விட்டு மீண்டும் உத்தரபிரதேசம் செல்ல, டெல்லி விமானத்தில் செல்ல வந்ததாகவும் கூறினார். அதோடு தனது அண்ணன் ராணுவத்தில் பணியில் இருக்கிறார். இந்த பை அவருடைய பைதான். எனவே இந்த பையில் துப்பாக்கி குண்டுகள் இருந்தது எனக்கு தெரியாது. நான் டெல்லியில் இருந்து வரும்போது, இதே பையில்தான் எனது துணிகளை வைத்துக் கொண்டு வந்தேன் என்றும் கூறினார்.
ஆனாலும், பாதுகாப்பு அதிகாரிகள் அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த பயணியையும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குண்டுகள் மூன்றையும், சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதற்கிடையே நேற்று காலை 6 மணிக்கு, டெல்லி செல்ல வேண்டிய அந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சுமார் 25 நிமிடங்கள் தாமதமாக சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றது.
The post டெல்லிக்கு செல்ல வந்த உ.பி. பயணியின் கைப்பையில் 3 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.