×

இலங்கை கடற்கொள்ளையர் மீண்டும் அட்டூழியம் வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல்: ரூ.3 லட்சம் மதிப்பு வலைகளை பறித்து சென்றனர்

வேதாரண்யம்: வேதாரண்யம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதோடு ரூ.3லட்சம் மதிப்பிலான வலைகளை பறித்து சென்றனர். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை மீனவகிராமத்தை சேர்ந்த சந்திராகாசனுக்கு சொந்தமான விசைப்படகில் புஷ்பவளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (70), ராஜேஷ் (26), ஆறுகாட்டு துறை பன்னீர்செல்வம் (50), வேல்முருகன் (36) ஆகிய 4 பேர் கடந்த 13ம்தேதி மதியம் மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் இரவு மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக 2 படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர், இவர்களது படகை சுற்றி வளைத்து அதில் ஏறினர்.

பின்னர் இரும்பு பைப்புகளால் 4 பேரையும் சரமாரி தாக்கியதோடு, படகில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான 700 கிலோ வலைகளை பறித்து சென்றனர். படுகாயம் அடைந்த 4 மீனவர்கள் நேற்று மதியம் ஆறுகாட்டுத்துறை வந்து கிராம பஞ்சாயத்தாரிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் வேதாரண்யம் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களில் 3 முறை வேதாரண்யம் மீனவர்கள் தாக்கப்பட்டதோடு, ரூ.10லட்சம் மதிப்பிலான மீனவர்களின் உடைமைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post இலங்கை கடற்கொள்ளையர் மீண்டும் அட்டூழியம் வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல்: ரூ.3 லட்சம் மதிப்பு வலைகளை பறித்து சென்றனர் appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Muthukrishnan ,Rajesh ,Pushpavalam ,Chandrakasan ,Arukatutura ,Vedaranyam taluka ,Nagapattinam district ,
× RELATED வேதாரண்யம் அருகே விசைப்படகில் ஓட்டை விழுந்து கடலில் மூழ்கியது