×
Saravana Stores

தமிழ்மொழி, கலாச்சாரம் உலகெங்கும் கொண்டு செல்ல பாடுபடுவோம் கலைஞரின் பிறந்த தினம் ஜூன் 3 செம்மொழி நாளாக கடைப்பிடிக்கப்படும்: உலகத்தமிழ் வளர்ச்சி மாநாட்டில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேச்சு

சென்னை: சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு நிறைவு மற்றும் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்று. இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். வளர்தமிழ் மாமணி விருதுகளை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா, கலைமாமணி வாசுகி கண்ணப்பன், முத்துராமலிங்கம் ஆண்டவர், கால்டுவெல் வேள்நம்பி, மலேசியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த முனைவர் செல்வ ஜோதி ராமலிங்கம், ஜப்பான் டோக்கியோ தமிழ்ச் சங்கம் கமலக்கண்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

மேலும் தமிழ் இணைய கல்விக்கழகம், தமிழில் பண்பாட்டுப் புலம், திருவனந்தபுரம் தமிழ் சங்கம், கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கை, அமெரிக்க தமிழ் அகாடமி, துபாய் முத்தமிழ் சங்கம் ஆகியவற்றிற்கு வளர்தமிழ் மாமணி விருதுகள் வழங்கப்பட்டன. கலாநிதி வீராசாமி எம்.பி. பேசுகையில், ‘‘விமான நிலையங்களில் அந்தந்த மாநில மொழிகளில் விமானம் செல்லும் இடம் மற்றும் வந்து சேரும் இடம் ஆகியவை மாநில மொழிகளில் அறிவிக்க நாடாளுமன்ற கூட்டுத் தொடரில் வலியுறுத்தி வருகிறோம் விரைவில் தமிழில் அறிவிப்பு வெளிவரும்’’ என்றார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தற்போது வணிக வளாகங்களில் தமிழில் பெயர் பலகைகள் இருக்கின்றன, 55600க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சென்னையில் தமிழில் பெயர் சூட்டப்பட்டுள்ளது, அப்படி தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு தங்க மோதிரமும் அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பல பூங்காக்களில் தமிழில் திருக்குறள் மற்றும் அதற்கான பொருள் அடங்கிய வாசகம் எழுதப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சிக்காக முதல்வர் தற்போது நிதி ஆதாரங்களை வழங்கி வருகிறார், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழில் கையெழுத்து போட்டியும் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சிக்காக முதல்வரும், துறை சார்ந்த அமைச்சர்களும் பாடுபட்டு வருகிறார்கள் என்றார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் சாமிநாதன் பேசுகையில்: உலகம் போகின்ற வேகம், மாற்று மொழியின் மோகம், இந்த நிலையில் முதல்வர் தமிழ் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஏராளம். அண்ணா, கலைஞர் ஆகியோரின் கனவுகளை முதல்வர் நிறைவேற்றி மாணவர்களிடம் தமிழை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். நடந்து முடிந்த வணிகர் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் தமிழக வணிக வளாகங்களில் தமிழ் பெயர்களை வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் இதுவரை துறை சார்ந்த சாதனைகளையும் திட்டங்களையும் முதல்வர் நூலாக வெளியிட உள்ளார். ஜனவரி 25ம் தேதி தமிழ்மொழி தியாகிகள் தினம் என கடைப்பிடிக்க உள்ளோம். தமிழ் மொழியை பாதுகாக்க அரசு மட்டுமல்லாமல் அனைவரும் முன் வர வேண்டும். நமது தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் உலகெங்கும் கொண்டு செல்ல பாடுபடுவோம். ஜூன் 3 கலைஞரின் பிறந்த தினம் செம்மொழி நாளாக கடைப்பிடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்மொழி, கலாச்சாரம் உலகெங்கும் கொண்டு செல்ல பாடுபடுவோம் கலைஞரின் பிறந்த தினம் ஜூன் 3 செம்மொழி நாளாக கடைப்பிடிக்கப்படும்: உலகத்தமிழ் வளர்ச்சி மாநாட்டில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Semlanguage ,Minister MLA ,World Tamil Development Conference ,Fr. ,SAMINATHAN ,Chennai ,Second World Tamil Development Conference ,Anna University ,Supramanian ,Kalaniti Weerasami ,Semmozhi Day ,
× RELATED நோயாளிகளுடன் வருபவர்களுக்கு சிவப்பு,...