×

“கல்வியும் பெயரளவிற்கு வழங்குவதா?”.. மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் 183 பேராசிரியர்களில் 53 பேர் மட்டுமே நியமனம்..!!

மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் தற்காலிக வளாகத்தை போலவே கல்வியும் பெயரளவுக்கு வழங்கப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நியமிக்க வேண்டிய 183 பேராசிரியர்களின் இதுவரை வெறும் 53 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டு இருப்பது கல்வியின் தரத்தை கேள்விக்குறி ஆக்கி உள்ளது. மதுரை தோப்பூரில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க மறுப்பதாலும் ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து கடன் கிடைப்பதில் உள்ள சிக்கலாலும் கட்டுமான பணிகள் தாமதம் ஆகி வருகின்றன. இதனிடையே ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் செயல்பட்டு வரும் தற்காலிக எய்ம்ஸ் வளாகத்தில் கல்வியும் பெயரளவுக்கு வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

மாணவர்களின் போராட்டங்களை தொடர்ந்து, 2 பாட்ச் மாணவர்களுக்கு மட்டும் தற்காலிக ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் கல்வி ஆண்டில் கூடுதலாக 50 மாணவர்களை கொண்ட 4வது பேட்ச்சிற்கு வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதால், ஏற்கனவே முதல் பேட்ச்சில் சேர்ந்து, 4ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தனியார் விடுதிக்கு மாற்றப்பட உள்ளனர். ஆனால் அடுத்த ஆண்டு நவம்பரில் தான் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் பகுதி அளவே நிறைவடையும் என அதன் நிர்வாக இயக்குனர் அனுமந்த ராவ் தெரிவித்துள்ளார். 4ம் ஆண்டு மாணவர்கள், நாக்பூர் எய்ம்ஸுக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடிவதற்குள் முதல் பேட்ச் மாணவர்கள், படிப்பையே முடித்துவிடும் சூழல் உள்ளது. இது மட்டுமின்றி, மதுரை எய்ம்ஸுக்கான 183 பேராசிரியர் பணியிடங்களில் 53 இடங்களை மட்டுமே நிரப்பி இருக்கும் ஒன்றிய அரசு, ஆசிரியர் அல்லாத 911 பணியிடங்களில் வெறும் 43 இடங்களை மட்டுமே நிரப்பி உள்ளது. இதன்மூலம் தற்காலிக வளாகத்தில் கூட தரமான கல்வியை வழங்க ஒன்றிய அரசு முன்வரவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.

The post “கல்வியும் பெயரளவிற்கு வழங்குவதா?”.. மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் 183 பேராசிரியர்களில் 53 பேர் மட்டுமே நியமனம்..!! appeared first on Dinakaran.

Tags : MADURAI AIIMS COLLEGE ,MADURAI ,MADURAI AIIMS MEDICAL COLLEGE ,Madurai AIIMS Hospital ,Dinakaran ,
× RELATED மதுரை வெள்ளக்கல் அருகே விவசாய...