×

எல்லையில்லா வளங்களை அருளும் எல்லைக்கரை ஆஞ்சநேயர்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும், ராமபிரானின் குலதெய்வமான அரங்கநாதஸ்வாமி வீற்றிருக்கும் திருவரங்கத்திற்கும் (ஸ்ரீ ரங்கம்), பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது தலமும், தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 60-வது சிவ ஸ்தலமான ஜம்புகேஸ்வரர் கோயில்கொண்டிருக்கும் திருவானைக்காவல் என்கின்ற இரு ஊர்களுக்குள் எல்லைப் பிரச்னை ஏற்பட்டது.திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதஸ்வாமிக்கு நித்ய கைங்கரியம் செய்பவர்கள், வைணவர்கள். திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரஸ்வாமிக்கு பூஜைகளை செய்துவருபவர்கள், சைவர்கள். இந்த எல்லைப் பிரச்னை, நாட்கள் செல்ல செல்ல சைவ – வைணவ சமயம் பிரச்னையாக உருவெடுத்தது.இந்த இரண்டு பகுதிகளும், அப்போது ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசரான கிருஷ்ணதேவ ராயரின் கட்டுப் பாட்டிற்குள் இருந்தது. இந்த பிரச்னை நாளுக்குநாள் அதிகமானது. பிரச்னையை உணர்ந்த கிருஷ்ணதேவராயர், தனது ராஜகுருவான ஸ்ரீ வியாசராஜ தீர்த்தரிடம், இப்பிரச்னையைப் பற்றி தெரிவிக்கிறார்.

ஒரு முறை, கிருஷ்ணதேவ ராயருக்கு சர்ப்பத்தினால் (பாம்பினால்) உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில், கிருஷ்ணதேவராயரை காப்பாற்றும் பொருட்டு, ஒரு நாள் மட்டும், தான் மன்னராக பொறுப்பேற்று, கிருஷ்ணதேவ ராயரின் சிம்மாசனத்தில், வியாசராஜ தீர்த்தர் அமர்ந்தார்.அன்று, கிருஷ்ணதேவ ராயரை தீண்ட சர்ப்பம் வந்தது. கிருஷ்ணதேவ ராயர் என்று நினைத்து சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ வியாசராஜரின் அருகில் வந்தது. தன் உடலின்மீது போற்றி இருக்கும் காவி ஷாட்டியை (காவித் துண்டு) எடுத்து, அந்த பாம்பின் முன்னால் தூக்கி வீசினார்.என்ன ஆச்சரியம்! பாம்பு அங்கேயே படம் எடுத்தபடி நின்றது. வியாசராஜர் சில மந்திரங்களை உச்சாடனம் செய்ய, வந்த வழியாகவே பாம்பு சென்றுவிட்டது. இத்தகைய அற்புதத்தை எல்லாம் நிகழ்த்திய ஸ்ரீ வியாசராஜ தீர்த்தரின் மகிமைகளை, கிருஷ்ணதேவராயரின் நாட்டு மக்கள் நன்கு அறிவர். அதனால், ராஜகுருவான ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் சொல்வதை மக்கள் ஏற்பார்கள் என்கின்ற யோசனையில், திருவரங்கம் – திருவானைக்காவல் ஆகிய இரு பகுதி மக்களுக்கு இடையே நடக்கும் எல்லைப் பிரச்னைகளை பற்றி விரிவாக வியாசராஜரிடம் எடுத்துரைத்தார்
கிருஷ்ணதேவ ராயர்.

இதனையடுத்து ஸ்ரீ வியாசராஜர், திருவரங்கத்திற்கு விஜயம் செய்தார். திருவரங்கம் மக்களும், திருவானைக்காவல் மக்களும் கூடியிருந்தனர். “நான் திருவரங்க க்ஷேத்திரத்தில் இருந்து எனது மூச்சுக்காற்றை இழுத்துப்பிடித்துக் கொண்டு, அதை வெளியிடாமல் நடந்து செல்வேன். எங்கு நான், என் மூச்சுக்காற்றை வெளியிடுகிறேனோ.. அது வரை திருவரங்கத்தின் எல்லைப் பகுதி. மீதமுள்ள பகுதிகள் எல்லாம், திருவானைக்காவல்’’ என்றார். இதனை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். மூச்சுக்காற்றை இழுத்தபடி நீண்ட தூரம் பயணித்தார் வியாசராஜர். அவரின் பின்னால், இரு பகுதி மக்களும், நாட்டு மன்னனும் பின்தொடர்ந்தனர். ஒரு குறிப்பிட்ட பகுதி வந்ததும், தான் இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சுக்காற்றை விட்டார். “இதுதான் எல்லைப் பகுதி’’ என அறிவித்தார், வியாசராஜர்.

அனைவரும் மகிழ்ந்தனர். இரு பகுதி மக்களும் ஒருவரையொருவர் பரஸ்பரமாக கட்டியணைத்துக்கொண்டனர். கிருஷ்ணதேவராயருக்கோ, மட்டற்ற மகிழ்ச்சி. மேலும், திருவரங்கம் – திருவானைக்காவல் எல்லையை குறிப்பதற்காக, அந்த இடத்தில், “வீர ஆஞ்சநேயஸ்வாமியையும்’’ பிரதிஷ்டை செய்தார், வியாசராஜதீர்த்தர். எல்லையில் இந்த ஆஞ்சநெயஸ்வாமி இருப்பதால், அன்று முதல் “எல்லைக்கரை ஆஞ்சநேயர்’’ என்னும் பெயரும் உருவாயிற்று.மகான் ஸ்ரீ வியாசராஜர் திருவரங்கத்திற்கு வந்தது, எல்லையை குறித்து காட்டியது என அனைத்தும், திருவரங்கம் மற்றும் திருவரங்கப் பெருமாளை பற்றிய “கோயிலொழுகு’’ என்னும் அதிகாரப்பூர்வமான புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.இங்கிருக்கும் எல்லைக்கரை ஆஞ்சநேயர், கேட்ட வரங்களை உடனடியாக கொடுப்பதாக பக்தர்கள் அனுபவப்பூர்வமாக தெரிவிக்கிறார்கள். குறிப்பாக, சித்த பிரம்மை பிடித்தவர்கள் அல்லது பயந்த சுபாவம் கொண்டவர்களுக்கு, வீர ஆஞ்சனேயர் என்னும் பெயருக்கு ஏற்றாற்போலவே, அவர்களுக்கு தைரியத்தை அருளுகிறார்.அனுமன் ஜெயந்தி அன்று, வேத பண்டிதர்கள் அனைவரும் ஒன்றுகூடி, ஆஞ்சநேயருக்கு உகந்த ஸூக்தங்களான “பளித்தா சூக்தத்தை’’ பாராயணம் செய்தும், “ஹரி வாயு ஸ்துதி’’ என்னும் மஹா மந்திரங்களை பாராயணம் செய்தும், விஷேஷ அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.

சில தினங்களுக்கு முன்புதான், இக்கோயில் கும்பாபிஷேகத்தை தற்போதுள்ள வியாசராஜ மடாதிபதியான, பூஜ்ய ஸ்ரீ வித்யாஸ்ரீ ஷ தீர்த்தர் சிறப்பாக செய்து முடித்தார். இந்த சம்பவத்தையெல்லாம் நினைவுகூறும் விதத்தில், ஆஞ்சநேயர் கோயிலின் நுழைவாயிலில், வளைவான ஆர்ச் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு பகுதியில் வைணவ சின்னங்களான கருடன் போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் சைவ சின்னங்களான நந்தி போன்றவைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. கூடுதல் சிறப்பு என்னவென்றால், இன்றும் ஆண்டிற்கு ஒரு முறை அதாவது, ஆடி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள், அரங்கனின் கோயிலில் இருந்து உற்சவரானநம்பெருமான், இந்த எல்லைக்கரை ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்து, பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.திருவரங்கமாம் ஸ்ரீ ரங்கத்திற்கு சென்றால், எல்லையில்லா அருள் கிடைக்க, கண்டிப்பாக எல்லைக்கரை ஆஞ்சநேயரையும் தரிசித்து வாருங்கள்! கோயில் தொடர்புக்கு: 9342456173, 9843646811.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6.30 முதல் 10.30 வரையிலும், மாலை 5.00 முதல் 8.00 மணி வரை.

எப்படி போவது?: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும் அல்லது சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், ஸ்ரீ ரங்கம் பேருந்தில் ஏறி, திருவானைக்காவல் தெப்பக்குளம் என்ற நிறுத்தத்தில் இறங்கி, எல்லைக்கரை ஆஞ்சநேயர் கோயில் எங்கு உள்ளது? என்று அங்கு யாரை கேட்டாலும் வழி சொல்வார்கள்.

 

The post எல்லையில்லா வளங்களை அருளும் எல்லைக்கரை ஆஞ்சநேயர் appeared first on Dinakaran.

Tags : Anjaneya ,Thiruvaranga ,Sri ,Bhuloka Vaikundam ,Aranganathaswamy ,Ramapiran ,Neeruttu Thalam ,Panchabhuta Thalams ,Jambukeswarar ,Shiva ,temple ,Chola Nadu Kaveri Vadakarait Thalams ,
× RELATED பொருளாதார நெருக்கடியில் இருந்து...