×
Saravana Stores

கரிக்கிலி ஊராட்சியில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க மக்கள் கோரிக்கை

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே கிரிக்கிலி ஊராட்சியில், ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கரிக்கிலி ஊராட்சியின் கிருஷ்ணாபுரம் கிராமத்திலிருந்து நெல்வாய் கூட்ரோடு செல்லும் மூன்று கிலோமீட்டர் தார்சாலை சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது. அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையில் அதன்பிறகு எந்தவித சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் தற்போது ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மிகவும் மோசமான சாலையாக மாறிபோய் உள்ளது. இந்த சாலையில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள், விவசாயிகள், கிராம மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி பஞ்சராகி நடுவழியில் நின்று விடுகிறது. எனவே, ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படும் சாலையை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா கொடியான் கூறுகையில், ‘கரிக்கிலி ஊராட்சியை சேர்ந்த மக்கள், விவசாய தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். வெளியூர் செல்வதற்கு பேருந்து பிடிப்பதற்காக இங்கிருந்து சில கிலோமீட்டர் பயணித்து அதன்பிறகு பேருந்து பிடித்து செல்ல வேண்டும். ஆனால், இந்த சாலையை அவர்கள் கடப்பதற்குள் மிகுந்த பாதிப்படைகின்றனர். எனவே, அரசு அதிகாரிகள் மக்களின் நன்மை கருதி உடனடியாக இச்சாலையை சீரமைத்து தர வேண்டும்’ என்றார்.

The post கரிக்கிலி ஊராட்சியில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Karikili Panchayat ,Madhurandakam ,Krikkili panchayat ,Maduraandakam ,Krishnapuram ,Chengalpattu District ,Achirupakkam Union ,Nelwai Kootro ,
× RELATED மதுராந்தகம் நகர காங். தலைவர் தேர்வு