×

கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி, ஆக.14: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால், ஓசூர் அருகே கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

நீர்மட்டமும் உயர்ந்தது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக இரு அணைகளுக்கான நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 588 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 702 கனஅடியானது. அணையில் இருந்து விநாடிக்கு 588 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், தற்போது 41.49 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 810 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,098 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1,434 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தென்பெண்ணையில் அதிகளவு தண்ணீர் செல்வதால் ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 50.50 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

The post கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kelavarapalli ,Krishnagiri Dam ,KRISHNAGIRI ,HOSUR ,KRISHNAGIRI DISTRICT ,Karnataka ,Tenbenai River ,Khelavarapalli ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி அணை பாசன கால்வாய்களை ₹98 கோடியில் புனரமைக்க திட்டம்