- ஆளுநர் ஆர். என்
- சுதந்திர தினம்
- திமுக
- சென்னை
- ஆளுநர் ஆர்.என்.ரவி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- 78 வது சுதந்திர தினம்
- சென்னை ஜார்ஜ் கோட்டை
- DMK கூட்டணி
- தின மலர்
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை 78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார்.
இதை தொடர்ந்து அன்று மாலை அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் சார்பில் தேநீர் விருந்து அளிக்கப்பட உள்ளது.
இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்து இருந்தது. ஆனால் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக, கூட்டணி கட்சித் தலைவர்களின் கருத்துகள் வருமாறு:
* செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசின் செயல்பாடுகளை முடக்கி, வளர்ச்சியை பாதித்து மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து, பாஜவின் ஊதுகுழலாக செயல்படுகிற தமிழக ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்தது. தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை பதிவு செய்கிற வகையில் ஆர்.என். ரவி வழங்குகிற தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கிறது.
* முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி): தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற நாளில் இருந்து, மக்கள் உணர்வுக்கு எதிராகவும், ஜனநாயக முறைகளை நிராகரித்தும் அதிகார அத்துமீறவில் ஈடுபட்டு வருகிறார். பாஜவின் ஊதுகுழலாக செயல்படுகிறார். எனவே, அவரது தேனீர் விருந்தை புறக்கணிக்கிறோம்.
* கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): கூட்டாட்சியை, அரசியலமைப்பை மதிக்காத ஆணவப்போக்கு கொண்ட ஆர்.என்.ரவி, ஆளுநர் பதவியில் நீடித்திருப்பதே இழுக்கு. அவரோடு தேநீர் விருந்து என்ற பேச்சுக்கே இடமில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அவரது அழைப்பை மீண்டும் நிராகரிக்கிறது.
* திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி): சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் வழக்கம்போல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநரின் தொடர் தமிழ்நாடு விரோத நடவடிக்கைகளின் காரணமாக இந்த நிகழ்வை விசிக புறக்கணிக்கிறது.
* துரை வைகோ (மதிமுக): மாநில அரசுக்கு எதிராகவும், சட்டமன்றத்தில் நீட் விலக்கு வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமலும் ஆளுநர் இருப்பதால் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கிறோம்.
* ஜவாஹிருல்லா (மமக): தமிழக ஆளுநர், தமிழ்நாட்டு மக்களின் நலன் குறித்த எந்தவித முன்னெடுப்புகளையும் செய்வதில்லை. எனவே ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம். தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்து புறக்கணிப்பு: திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு appeared first on Dinakaran.