×

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்; கோயிலுக்கு சென்று இந்துக்களை சந்தித்தார் இடைக்கால தலைவர்: பொறுமையாக இருக்க வலியுறுத்தல்

டாக்கா: வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தால் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து அவர் நாட்டை விட்டு தப்பி ஓடினார். பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் 16 பேர் கொண்ட இடைக்கால அரசு கடந்த 8ம் தேதி பொறுப்பேற்றது. இதைத் தொடர்ந்து கலவரங்கள் ஓய்ந்து அமைதி திரும்பியுள்ளது.

அதே சமயம், தலைமை நீதிபதி, மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட ஹசீனாவுக்கு நெருக்கமான பல உயர் அதிகாரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் சிறுபான்மையினர்களான பல இந்துக்கள் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்து கோயில்கள் சிதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுக்கு மத்தியில் டாக்காவில் உள்ள தாகேஸ்வரி கோயிலுக்கு முகமது யூனுஸ் நேற்று சென்றார். அங்கு இந்துக்களை சந்தித்து பேசிய அவர், ‘‘நமது அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் சமம்.
நாம் அனைவரும் ஒரே உரிமை கொண்ட ஒரே மக்கள். நமக்குள் எந்த வேறுபாடும் காட்டாதீர்கள். பொறுமையாக இருங்கள். எங்களுக்கு நேரம் கொடுங்கள். அதன் பின் எங்களால் எது முடியும், எது முடியாது, எதில் நாங்கள் தோற்றோம் என்பது பற்றி விமர்சனம் செய்யுங்கள்.

ஒவ்வொருவரையும் முஸ்லிம்களாகவோ, இந்துக்களாகவோ, பவுத்தர்களாகவோ பார்க்காமல், மனிதர்களாக பார்க்க வேண்டும் என நமது ஜனநாயகம் கூறுகிறது. அனைத்து பிரச்னைக்கும் காரணமாக அரசு நிர்வாக சீர்கேடுகள் சரி செய்யப்படும்’’ என வாக்குறுதி அளித்துள்ளார்.

ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு
இடஒதுக்கீடுக்கு எதிரான மாணவர் போராட்டத்தில் வெடித்த கலவரத்தில் 560 பேர் பலியான நிலையில், கடந்த மாதம் 19ம் தேதி முகமத்பூரில் நடந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் பலியானார். அவரது உறவினர் கொடுத்த புகாரின் பேரில், இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது அவாமீ லீக் கட்சியின் பொதுச் செயலாளர் அபைதுல் காதிர், முன்னாள் உள்துறை அமைச்சர் அசதுஷாமன் கான் கமல், முன்னாள் ஐஜி சவுதுரி அப்துல்லா அல் மமுன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மீது நேற்று கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்; கோயிலுக்கு சென்று இந்துக்களை சந்தித்தார் இடைக்கால தலைவர்: பொறுமையாக இருக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Dhaka ,Sheikh Hasina ,Bangladesh ,Muhammad Yunus ,Dinakaran ,
× RELATED வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு உடல்நலக்குறைவு