நெல்லை: கச்சிகுடாவில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில் தொடர்ந்து தென்மாவட்டங்களுக்கு தாமதமாக வருவதால் பயணிகள் அதிருப்தியில் உள்ளனர். தென்மாவட்டங்களில் இருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு வாராந்திர ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், கடந்த 2014ம் ஆண்டு நாகர்கோவிலில் இருந்து கச்சிகுடாவிற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் சனிக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு நாகர்கோவிலில் புறப்பட்டு, நெல்லை, ேகாவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ரெங்கம், விருதாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கன்டோன்மென்ட், காட்பாடி, குடுர், நெல்லூர் வழியாக திங்கட்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு கச்சிகுடா போய் சேருகிறது. கச்சிகுடாவிலில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில்தான் ஐதராபாத் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுமார் 1496 கிமீ தூரம் பயணிக்கும் இந்த ரயில் கச்சிகுடா போய் சேர 29 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. மறுமார்க்கமாக இதே வழித்தடத்தில் கச்சிகுடா – நாகர்கோவில் வாராந்திர ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் இருந்து ஐதராபாத் மற்றும் ஆந்திராவின் பல்வேறு நகரங்களுக்கு செல்வோர் இந்த ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயிலில் காணப்படும் அதிக கூட்டம் காரணமாக நாகர்கோவிலில் இருந்து கச்சிகுடாவிற்கு அடிக்கடி சிறப்பு ரயில்களையும் தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. இருப்பினும் நாகர்கோவில் – கச்சகுடா மார்க்க ரயில்கள் எப்போதும் குறித்த நேரத்திற்கு செல்வதில்லை என்ற புகாரும் பயணிகள் மத்தியில் அடிக்கடி எழுந்து வருகிறது. வாரம்ேதாறும் கச்சிகுடா – நாகர்கோவில் ரயில் தென்மாவட்டங்களுக்கு தாமதமாக வருவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் (11ம் தேதி) கச்சிகுடாவில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வந்த ஒரு சிறப்பு ரயில் சுமார் 5 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. இதுகுறித்து நெல்லை பயணிகள் சங்கத்தை சேர்ந்த அந்தோனி கூறுகையில், ‘‘தென்மாவட்ட மக்களுக்கு இதுநாள் வரை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலம் செல்ல உருப்படியாக ஒரு தினசரி ரயில் இல்லை. ஐதராபாத்திற்கு தினசரி ரயில் கேட்டு ஓய்ந்து போய்விட்டோம். கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு கூட, நாகர்கோவிலில் இருந்து ரயில் உள்ளது. தூத்துக்குடியில் இருந்து மைசூருக்கு தினசரி ரயிலும் உள்ளது. எனவே தென்மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஐதராபாத்திற்கு ஒரு தினசரி ரயில், அதுவும் திருப்பதி வழியாக இயக்கப்பட வேண்டும். தென்மாவட்ட மக்கள் திருப்பதி செல்லவும், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் செல்லவும் தினசரி ரயில் அவசியம் தேவையாகும். தினசரி ரயில் என்றால் தேவையற்ற தாமதங்களும் தவிர்க்கப்படும்.’’ என்றார்.
The post ஐதராபாத்திற்கு தினசரி ரயில் இயக்கப்படுமா?.. வாரம்தோறும் தாமதமாக வரும் கச்சிக்குடா- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்: பயணிகள் அதிருப்தி appeared first on Dinakaran.