×

ஆசிரியரிடமும் தேவையின்றி செல்போனில் பேசாதீர்கள் மாணவிகள் நினைத்தால் பாலியல் தொல்லை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்-மகளிர் இன்ஸ்பெக்டர் அறிவுரை

நாகர்கோவில் : மாணவிகள் நினைத்தால் பாலியல் தொல்லை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி கூறினார். குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பள்ளிகளில் போக்சோ சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவில் கிறிஸ்துநகரில் உள்ள புனித அலோசியஸ் பள்ளி கலையரங்கில் நேற்று போக்சோ சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது :தற்போது வரை 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்பவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நான் பணியாற்றிய போது ஏராளமான புகார்கள் வந்து, போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில், ஆசிரியர்களால் பாலியல் தொல்லை, மிரட்டல் இருந்தால் உடனடியாக 1098 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளி மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை 1098, 181, 14417 என்ற எண்களுக்கு போன் செய்து தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் மாணவிகளின் விபரத்தை கூற வேண்டியதில்லை. புகாரை மட்டும் தெரிவித்தால் போதும். பாதிக்கப்பட்ட மாணவி தான் என்றில்லாமல், சக தோழிகள் கூட புகார் தெரிவிக்கலாம்.வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறைகளில் இந்த புகார் தெரிவிக்கும் எண்கள் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டு இருக்க வேண்டும். உங்கள் புகாரை பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர் மறைத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிகள் நினைத்தால் பாலியல் தொல்லை பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். உங்களுக்கு தொல்லை தருபவர்கள் குறித்து தைரியமாக புகார் அளியுங்கள். தற்கொலை என்பது கோழைத்தனம். கோழைத்தனமான முடிவை எடுக்காதீர்கள். புகார் கொடுத்தால் பள்ளியை விட்டு நீக்கி விடுவார்களோ? என்ற அச்சம் தேவையில்லை. பாதிக்கப்படும் மாணவிக்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை வழங்கும். ஆசிரியராக இருந்தாலும் கூட தேவையில்லாமல் செல்போனில் பேசாதீர்கள். கல்விக்காக மட்டுமே செல்போன் வசதியை பயன்படுத்துங்கள். சமூக வலை தளங்களில் சிக்குவதால் தான் வாழ்க்கை விபரீதமாகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்….

The post ஆசிரியரிடமும் தேவையின்றி செல்போனில் பேசாதீர்கள் மாணவிகள் நினைத்தால் பாலியல் தொல்லை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்-மகளிர் இன்ஸ்பெக்டர் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Inspector ,Shanthakumari ,Kumari ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...