ஈரோடு, ஆக.13: இலவச சேலை உற்பத்தி செய்ய பாலியஸ்டர் பாவு நூலுக்கு பதிலாக மீண்டும் காட்டன் நூல் வழங்கப்படும் என்று அரசு உறுதியளித்ததையடுத்து விசைத்தறியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டு தோறும் இலவச வேட்டி, சேலை விநியோகிக்கப்பட்டு வருகின்றது. நடப்பாண்டில் 1 கோடியே 68 லட்சம் வேட்டிகளும், 1 கோடியே 73 லட்சம் சேலைகளும் உற்பத்தி செய்யப்பட உள்ளது. வேட்டி, சேலை உற்பத்தியானது கைத்தறி மற்றும் விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் விரைவில் உற்பத்திக்கான நூல் வழங்கப்பட உள்ளது.
இதில், பெரும் பகுதி விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்நிலையில், சேலை உற்பத்திக்கு வழக்கமாக வழங்கப்படும் காட்டன் பாவு நூலுக்கு பதில், பாலியஸ்டர் நூல் வழங்க அரசு முடிவு செய்திருந்தது. ஆனால், பாலியஸ்டர் நூல் வழங்கினால் தற்போது நடைமுறையில் உள்ள ‘சைசிங்’ மூலம் பாவு ஓட்ட முடியாத நிலை ஏற்படும் என்றும் எனவே பாலியஸ்டர் நூலுக்கு பதிலாக கடந்தாண்டுகளை போல காட்டன் நூல் வழங்க வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நேற்று காலை 6 மணி முதல் ஈரோடு, வீரப்பன் சத்திரம், சித்தோடு, லக்காபுரம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட திருச்செங்கோடு, பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறியாளர்கள் இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொண்டனர். இதையடுத்து அரசு தரப்பில் நேற்று காலை விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் கடந்தாண்டை போல காட்டன் நூல் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து தங்களது ஸ்டிரைக் வாபஸ் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவித்தனர். இதனால் 4 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் விசைத்தறிகள் வழக்கம் போல இயக்கப்பட்டன. பின்னர் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவர் சுரேஸ், செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் தங்களது கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினர்.
The post இலவச சேலை உற்பத்திக்கு காட்டன் நூல் விநியோகம் appeared first on Dinakaran.