×

வெளிநாடுகளில் வேலை தேடும் நபர்களே உஷார்..! சைபர் குற்றங்களில் சிக்காமல் இருக்க போலீசார் எச்சரிக்கை

சென்னை: வெளிநாட்டில் வேலைதேடுபவர்கள் சைபர் குற்றங்களில் இருந்து எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பது குறித்து சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெளிநாடுகளில் வேலைதேடும் மக்களை சில போலி முகவர்கள் சுவர்ச்சிகரமாண வேலைவாய்ப்புகள் மூலம் ஏமாற்றி டூரிஸ்ட் விசா மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்கள் அங்கு சென்றதும் கட்டாயப்படுத்தி இணைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கின்றனர். பெரும்பாலும் இதுமாதிரியான சைபர் க்ரைம் கும்பல்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து செயல்படுகின்றன.

சட்டவிரோத வேலைவாய்ப்பு முகவர்கள் மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் வேலைதேடுபவர்களை குறிவைத்து அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு தருவதாகக்கூறி வேலைக்கு எடுக்கின்றனர். இந்த ஏஜென்சிகள் அவர்களுக்கு டேட்டா என்ட்ரி வேலைகள், கால்சென்டர் வேலைகள் மற்றும் பிறமென்பொருள் வேலைகளை தருவதாக உறுதிகூறி நம்பவைக்கின்றன. இவ்வாறு வேலைக்கு சேர்ந்தவர்கள் அந்தந்த நாடுகளை அடைந்தவுடன், அங்கு செயல்படும் சைபர் க்ரைம் கும்பல், பாதிக்கப்பட்டவர்களின் பாஸ்போர்ட்டுகளை சேகரித்து அந்த நாடுகளில் இருந்து வெளியேற வழியில்லை என மிரட்டுகின்றனர். மேலும் இந்தியா திரும்புவதற்கு ஆயிரக்கணக்கான சீன யுவான்களை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகின்றனர்.

ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா, ஹரியானா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். பின்னர் அவர்கள் இணைய அடிமைகளாக மாற்றப்படுகின்றனர். இவ்வாறு மாற்றப்பட்ட இணைய அடிமைகள் டிஜிட்டல் மோசடிகள், சட்டவிரோத கடத்தல்கள், முதலீட்டு மோசடிகள், டேட்டிங் மோசடிகள் போன்ற சைபர் க்ரைம்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து அதிக எண்ணிக்கையில் உள்ள பயணிகள் கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் பயணம் செய்து இந்தியா திரும்பவில்லை என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பலர் இதுபோன்ற சைபர்குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்டு மக்களை ஏமாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுத்துள்ளது. எனவே வேலை தேடும் இளைஞர்கள், சைபர் க்ரைம் குற்றங்களில் இருந்து தங்கள் தற்காத்துக் கொள்வது குறித்து கீழ்காணும் எச்சரிக்கை விழிப்புணர்வு நடவடிக்ைககளை கடைப்பிடிக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

வேலைதேடும் நபர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை:
* வெளிநாட்டில் வேலைதேடும் நபர்களுக்கு, வேலைவாய்ப்பு முகவர்கள் தொடர்பு கொண்டால் அவர்கள் பதிவு செய்யப்பட்ட ஏஜென்சிகளா அல்லது போலியான முகவர்களா என்பதை https://emigrate.gov.in/#/emigrate/emigrant/list-of-ra-consolidate-report என்ற லிங்க் இன் மூலம் உறுதி செய்ய வேண்டும்.
* https://emigrate.gov.in/#/emigrate/recruiting-agent/list-of-unregistered-ra-agencies-oragents என்ற இணைப்பில் வழங்கப்பட்டுள்ள பதிவு செய்யப்படாத சட்டவிரோதமான ஆட்சேர்ப்பு முகவர் பட்டியலிலிருந்தும் போலியான தடைசெய்யப்பட்ட முகவர்களை அடையாளம் கண்டறியலாம்.
* வேலை தேடுபவர்களை வலையில் விழவைக்க கவர்ச்சிகரமான பேக்கேஜ்களுடன் கூடிய வேலைவாய்ப்புகளை பயன்படுத்துவார்கள். இவ்வாறான வேலைவாய்ப்புகளை தொடர்வதற்கு முன் பலமுறை சரிபார்க்க வேண்டும்.
* வேலைவாய்ப்புகளுக்காக சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் செல்ல ஒரு போதும் ஒப்புதல் அளிக்கக் கூடாது. நீங்கள் அங்கு சென்று உங்கள் வேலையைத் தொடங்கியவுடன் உங்களுக்கு வேலை விசாவைப் பெற்றுத்தருவதாக போலியான ஏஜென்சிகள் உங்களுக்கு உறுதியளிக்கலாம். ஆனால் நீங்கள் அந்த நாடுகளுக்கு சென்றவுடன் உங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசாக்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு இணைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
* உங்களை தொடர்பு கொண்டு பேசுபவர்கள் மோசடி செய்பவர்கள் என நீங்கள் சந்தேகிக்கும் போதெல்லாம், அவர்களின் செல்போன் எண்ணை சேஃப் போர்டலில் https://cybersafe.gov.in/ சரிபார்க்கவும். இந்த எண் ஏற்கனவே வேறு ஏதேனும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதா என்பதை இது உங்களுக்குத் தெரிவிக்கும்.
* மேலும் தங்களை தொடர்பு கொண்டவர்கள் மோசடி செய்பவர்கள் என்ற சந்தேகம் எழுந்தால் உடனே சைபர் க்ரைம் https://sancharsaathi.gov.in/sfc/Home/sfc-complaint.jsp இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
* இதுபோன்ற மோசடிகளில் நீங்கள் பாதிக்கப்பட்டிருத்தால், cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும் அல்லது நிதி மோசடிகள் நடந்தால் 24 மணி நேரத்திற்குள் 1930க்கு அழைக்கவும். இவ்வாறு சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து அதிக எண்ணிக்கையில் உள்ள பயணிகள் கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் பயணம் செய்து இந்தியா திரும்பவில்லை என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது

The post வெளிநாடுகளில் வேலை தேடும் நபர்களே உஷார்..! சைபர் குற்றங்களில் சிக்காமல் இருக்க போலீசார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை துறைமுகத்தில் பாரம் தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்து..!!