×
Saravana Stores

போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 17,481 கடைகள் மூடப்பட்டு ரூ.33 கோடி அபராதம் வசூல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே ஆகியோர் மாணவர்களுடன் பங்கேற்று உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 2022ம் ஆண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ‘போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத தமிழ்நாடு’ உருவாக்க முன்னெடுப்புகள் மற்றும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக 30 லட்சம் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி காவல் துறை சார்பில் நடைபெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் 70 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 37,592 அரசு பள்ளிகள், 8329 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11,443 தனியார் பள்ளிகள் என்று மொத்தம் 57,364 பள்ளிகளில் ஏறத்தாழ 1 கோடி மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் வகையிலான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.

மருத்துவத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு துறை போதைப் பொருட்களுக்கு எதிராக பல்வேறு துறைகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இது வரை 8,66, 619 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 32, 404 கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்து கண்டறியப்பட்டது. அவர்களிடம் இருந்து 20,91,19, 478 மதிப்புள்ள 2,86,681 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 17,481 கடைகள் மூடப்பட்டு ₹ 33,28,13,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

The post போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 17,481 கடைகள் மூடப்பட்டு ரூ.33 கோடி அபராதம் வசூல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Chennai ,Minister of Health and People's Welfare ,District ,Collector ,Rashmi Siddharth Jagade ,Saitappettai Government Model Higher Secondary School ,Dinakaran ,
× RELATED 2021ம் ஆண்டுக்கு பின் வெளிநோயாளிகள்...