×
Saravana Stores

பெரியபாளையம் பகுதியில் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பை கழிவுகளை தூய்மை பணியாளர்கள் வெறும் கைகளால் அள்ளும் அவலம்: பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரிக்கை

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 12,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ஆரணி ஆற்றங்கரையையொட்டி பவானி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆடி மாத திருவிழா தொடர்ந்து 14 வார காலம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான ஆந்திரா, புதுச்சேரி, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் தற்போது, ஆடி மாத திருவிழா தொடங்கி 4 வார காலம் சிறப்பாக நடந்தது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அடிப்படை வசதிகளுக்காக செய்யக்கூடிய முன்னேற்பாடுகளை குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பெரியபாளையம் பவானி அம்மன் ஆடி திருவிழாக்கு வருகை தரும் பக்தர்களுக்காக குடிநீர், கழிப்பறை, பேருந்து உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

அதற்காக பல லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றன. பெரியபாளையம் பகுதியில் வீடுகள், உணவகங்கள், இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் குப்பை கழிவுகளை ஊராட்சியின் சார்பில் வைக்கப்படும் குப்பைத் தொட்டிகளில் கொட்டிச் செல்வது வழக்கம். அப்படி கொட்டிச் செல்லும் குப்பைகளை நாள்தோறும் தூய்மை பணியாளர்களை வைத்து அப்புறப்படுத்துவதும் வழக்கம். ஆனால் ஊராட்சியில் உள்ள பேருந்து நிலையம், பஜார் பகுதியில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் பவானியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் சாலையோரம் வீசப்படுகின்றன.

தற்போது, ஆடித் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு தூய்மை தொழிலாளர்களை தற்காலிகமாக பணியில் அமர்த்தி காலை, மாலை என இரு வேளைகளில் குப்பைகளை சேகரிக்கும் பணியில் அவர்ர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட வேண்டும். ஆனால் உபகரணங்கள் வழங்காததால் வெறும் கைகளால் சாலையோரம் சேற்றில் கிடக்கும் குப்பைகளை வெறும் கைகளால் அள்ளும் அவல நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பக்தர்கள் தங்கும் பகுதிகளிலும், பெரியபாளையம் மேம்பாலம் பகுதியிலும் இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர். அந்த குப்பை கழிவுகள் அகற்றப்படவில்லை. ஊராட்சியில் பல்வேறு பகுதிகளை சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். அந்த பணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் அன்றாடம் கண்காணிக்க வேண்டும். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு கையுறைகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க வேண்டும்.

சமீபகாலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அந்தத் தண்ணீர் சாலையிலும் ஆங்காங்கு தேங்கி நிற்பதாலும் அதில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் பல்வேறு தொற்றுநோய் வருவதற்கு முன்பே சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை செய்ய தவறிய சுகாதாரத் துறையினர் மீதும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தராமல் பணி மேற்கொள்ளும் பெரியபாளையம் ஊராட்சி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் நமக்காக பணி செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை மருத்துவ முகாம்களை அமைத்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

 

The post பெரியபாளையம் பகுதியில் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பை கழிவுகளை தூய்மை பணியாளர்கள் வெறும் கைகளால் அள்ளும் அவலம்: பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Periyapalayam Panchayat ,Ellapuram Union, Tiruvallur District ,Bhavani ,Amman ,temple ,Arani river ,Adi month festival ,
× RELATED மிக்ஜாம் புயலால் சேதமடைந்து...