×
Saravana Stores

வெளிநாடு, வெளி மாநில கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உயர்கல்வி பயில தேர்வாகி உள்ள மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

*கல்வி முன்னேற்றத்தில் பிறரோடு ஒப்பிட்டு முன்னேற வேண்டும் என அறிவுரை

ஊட்டி : கல்வி முன்னேற்றத்தில் பிறரோடு ஒப்பிட்டு முன்னேற வேண்டும் என குன்னூர் அரசு மாதிரி பள்ளியில் பயின்று வெளிநாடு மற்றும் வெளி மாநில புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில தேர்வாகியுள்ள மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயில்கின்ற மாணவ, மாணவிகளும் சர்வதேச மற்றும் தேசிய அளவில் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயின்று சமூகத்தில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் மாதிரி பள்ளி என்ற திட்டம் துவக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாதிரி பள்ளி திறக்கப்பட்டுள்ளது.

அறிவு வேட்கை, சாதி, மத, பாலின வேறுபாடின்றி சமூக பொறுப்புணர்வுள்ள சக மனிதனை நேசிக்கும் குடிமக்களை உருவாக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் மீத்திறன் உள்ள மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு வறுமை சூழலால் எவ்வித தொய்வும் அடைந்திடாத வண்ணம் உண்டு உறைவிட பள்ளி அமைத்து அனைத்து வசதிகளையும் அவர்களுக்கு அளித்து உயர் கல்வியில் சாதித்து சாதனையாளர்களாக உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் வட்டம், ஓட்டுப்பட்டரை வசம்பள்ளம் பகுதியில் பள்ளிகல்வித்துறை சார்பில் அரசு மாதிரி மேல்நிலை உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாணவர்களின் தனித்துவத்தையும், தனித்திறன்களையும் வளர்த்தெடுத்தல் அவர்கள் விரும்பும் துறையில் உயர்கல்வி வாய்ப்புகளை மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் பெற வழிவகை செய்தல் மாணவர் தம் சுய சிந்தனையை ஊக்குவித்தல், மொழித்திறன் வளர்த்தல் என பன்முகம் கொண்ட பயிற்சி மையமாக இந்த மாதிரி பள்ளி அமைந்துள்ளது. சிறப்பு ஆசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு நீட், போட்டி தேர்வுகள் போன்ற இதர தேர்விற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இப்பள்ளியில் பயின்று வெளிநாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைகழகங்களில் சேர உள்ள 8 மாணவ, மாணவிகளை நேற்று ஊட்டியில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து அவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, உயர்கல்வி பயிலச் செல்லும் மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டியவை குறித்தும், ஆடை அணிகலன்களில் பிறரோடு ஒப்பிட்டு பார்க்காமல் கல்வி முன்னேற்றத்தில் பிறரோடு ஒப்பிட்டு முன்னேற வேண்டும். செல்போனை உயர்கல்வி பயில்வதற்கான அறிவு சார்ந்த தகவல்களை தேடுவதற்காக பயன்படுத்த வேண்டும்.

வெளி மாநிலம் மற்றும் வெளிநாடு சென்று பயிலும் மாணவர், மாணவிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், என அறிவுறுத்தினார். குன்னூரில் செயல்படும் மாதிரி பள்ளியில் பயின்ற மாணவர்கள் சர்வதேச மற்றும் தேசிய அளவில் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளில் பயில தேர்வாகி உள்ளனர். இதன்படி கூடலூரை சேர்ந்த மாணவி பூர்ணிமா தைவான் நாட்டின் புகழ்பெற்ற ஐசோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வியில் செயற்கை நுண்ணறிவு பிரிவிலும், ஊட்டி பி.மணியட்டியை சேர்ந்த பிரகலதா காஞ்சிபுரத்தில் உள்ள ஐஐடிஎம் கல்வி நிறுவனத்தில் இளம் பொறியியல் இயந்திரவியல் பயில தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு சான்று மற்றும் லேப்டாப் வழங்கியுள்ளார்.

கூடலூர் பகுதியை சேர்ந்த நிசாந்தினி சென்னை எப்டிடிஐ கல்வி நிறுவனத்தில் ஆடை வடிவமைப்பு, மாணவர் ஹரிகிருஷணன் பாட்னாவில் உள்ள என்ஐஎப்டியில் ஆடை வடிவமைப்பு துறையில் பயிலவும் தேர்வாகி உள்ளனர்.

மாணவி பத்ம கேரளாவில் உள்ள புகழ்பெற்ற என்ஐஎப்டியில் ஆடை வடிவமைப்புதுறையில் பயிலும், ஊட்டி அருகே கிண்ணக்கொரை பகுதியை சேர்ந்த மாணவர் மஞ்சுநாத் ஆந்திரா மாநிலம் விசாகபட்டினத்தில் உள்ள ஐஎம்யு பல்கலைக்கழகத்தில் கடல் சார்ந்த பொறியியல் பிரிவில் பயிலவும், மாணவி தர்ஷினி காந்திகிராமம் பல்கலைக்கழத்தில் ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு பிரிவிலும், மாணவி மோனிகா மும்பையில் உள்ள சிஈபிஎஸ்யில் ஒருங்கிணைந்த முதுகலை அறிவியலில் உயிரியல் பயில தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளிகளின் மண்டல ஒருங்கிணைப்பாளர் இராசேந்திரன், மாதிரி பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன், மாவட்ட கலெக்டரின் தனி எழுத்தர் (கல்வி) பிரமோத் உட்பட பலர் உடனிருந்தனர்.

The post வெளிநாடு, வெளி மாநில கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உயர்கல்வி பயில தேர்வாகி உள்ள மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Coonoor Government Model School ,Dinakaran ,
× RELATED உன்னத உறவுகள்