×

வனங்களில் பராமரிப்பின்றி காணப்படும் தடுப்பணைகள்

 

ஊட்டி, ஆக. 12: நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் உள்ள பல தடுப்பணைகள் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகின்றன. இவற்றை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனங்களில் புலி, சிறுத்தை, tயானை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. வனப்பகுதிகளில் உள்ள இயற்கை நீருற்றுகள், குட்டைகள் போன்றவை வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றன.

இதுதவிர கோடை காலங்களில் விலங்குகளின் தண்ணீர் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் வனங்களில் நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் வனத்துறை சார்பில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் தேக்கப்படும் தண்ணீரை விலங்குகள் அருந்தி தாகம் தீர்க்கின்றன. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் உள்ள பல தடுப்பணைகள் போதிய பராமரிப்பின்றி காட்சியளிக்கின்றன.
அவற்றில் மண் குவிந்து காணப்படுவது மட்டுமின்றி, சிறு சிறு துளைகள் ஏற்பட்டு அவற்றில் தண்ணீர் கசிந்து வீணாகி வருகின்றன.

குந்தா, குன்னூர், கட்டபெட்டு, ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் பராமரிப்பின்றி மண் குவிந்தும், காய்ந்த மரங்கள், செடி உள்ளிட்ட குப்பைகள் சூழ்ந்தும், முட்புதர்கள் வளர்ந்தும் காணப்படுகின்றன.  தற்போது நீலகிரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீர் வரத்து உள்ளது.  ஆனால் தடுப்பணைகள் பராமரிக்கப்படாததால் நீர் வீணாகி வருகின்றன. எனவே இவற்றை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post வனங்களில் பராமரிப்பின்றி காணப்படும் தடுப்பணைகள் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்கா வளைவுகளில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்