×

தண்டையார்பேட்டையில் நெட்சென்டர் மூலம் ஐஆர்சிடிசி அனுமதியின்றி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து ரூ5 லட்சம் மோசடி: வாலிபர் கைது

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் நெட்சென்டர் மூலம் ஐஆர்சிடிசி அனுமதியின்றி ரயில் டிக்கெட் முன்பதிவு  செய்து பயணிகளுக்கு வழங்கி ரூ5 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து கம்ப்யூட்டர், பிரிண்டர், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிகளின் வசதிக்காக ஐஆர்சிடிசி மூலம் டிக்கெட் மற்றும் உணவு  விற்பனை  செய்து வருகிறது. இந்த நிலையில், தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிகளுக்கு வழங்க ஐஆர்சிடிசியில் அனுமதி பெற்றிருக்கவேண்டும். முன்பதிவு செய்யாமல் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கினால் டிராவல்ஸ் ஏஜென்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் அனுமதியின்றி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்யப்படுவதாக புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகர் ரயில் நிலைய  பாதுகாப்பு படை  போலீசாருக்கு, புதுடெல்லியில் உள்ள ஐஆர்சிடிசி அலுவலகத்தில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி புதுவண்ணாரப்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி எஸ்ஐக்கள் சசி புஷன் குமார், ராஜசேகர் ஆகியோர் தலைமையிலான போலீசார்,  சந்தேகத்தின் பேரில் தண்டையார்பேட்டை நேதாஜி நகர் மெயின் தெருவை சேர்ந்த சக்திவேல் (30) என்பவரை பிடித்து விசாரணை விசாரித்தனர். இதில், அதே பகுதியில் சக்தி என்ற பெயரில் நெட் சென்டர் நடத்தி, ஐஆர்சிடிசி அனுமதியின்றி தனிநபர் ஐடியில்  தொடர்ந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து சக்திவேலிடம் இருந்து காலாவதியான ஒரு லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள 244 ரயில் டிக்கெட்கள், டிக்கெட் முன்பதிவு செய்ய பயன்படுத்திய கம்ப்யூட்டர், பிரிண்டர், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோல் கடந்தாண்டு திருவொற்றியூரில் ஐஆர்சிடிசி அனுமதியின்றி ரயில் முன்பதிவு டிக்கெட் எடுத்து பயணிகளுக்கு விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது….

The post தண்டையார்பேட்டையில் நெட்சென்டர் மூலம் ஐஆர்சிடிசி அனுமதியின்றி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து ரூ5 லட்சம் மோசடி: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : IRCTC ,Netcentre ,Thandaiarpet ,Thandaiyarpet ,Netcenter ,Thandaiyarpettai ,Dinakaran ,
× RELATED ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு...