சிம்லா: இமாச்சலபிரதேசத்தில் கனமழை, வௌ்ளம், நிலச்சரிவு காரணமாக 288 சாலைகள் மூடப்பட்டுள்ளன. தென்மேற்கு பருவமழை காரணமாக வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இமாச்சலபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை, வௌ்ளம், நிலச்சரிவு காரணமாக மாநிலம் முழுவதும் 288 சாலைகள் மூடப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
இந்நிலையில் மாநில அவசரகால செயல்பாட்டு மையம் வௌியிட்ட அறிக்கையில், “ கடந்த வௌ்ளிக்கிழமை(9ம் தேதி) 138 சாலைகளும், நேற்று முன்தினம்(10ம் தேதி) மட்டும் 150 சாலைகள் மூடப்பட்டன. மேலும் மாநிலத்தில் 458 மின்சாரம் மற்றும் 78 குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பிலாஸ்பூர், சம்பா, ஹமிர்பூர், குலு, கங்க்ரா, மண்டி, சிம்லா, சோலன், சிர்மவுர் மற்றும் உனா ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராஜஸ்தானில் 2 பேர் பலி: ராஜஸ்தான் மாநிலத்திலும் தென்மேற்கு பருவமழை நீடிக்கிறது. இங்குள்ள கரவுலியில் மட்டும் அதிக அளவாக 380 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் கரவுலியின் டோலிகர் மொஹல்லாவில் ஒரு வீட்டில் ஜாகீர் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை பெய்த கனமழையால் ஜாகீர் கானின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் ஜாகீர் கான் மற்றும் அவரது மகன் ஆகியோர் பலியாகினர். மேலும் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The post வட மாநிலங்களில் கனமழை; இமாச்சலில் நிலச்சரிவு 288 சாலைகள் மூடல் appeared first on Dinakaran.