×

கிண்டி ஆளுநர் மாளிகைக்கு பெட்ரோலுடன் வந்த பெண்ணால் பரபரப்பு: போலீசார் மடக்கி பிடித்தனர்

சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகைக்கு பெட்ரோல் கேனுடன் வந்த பெண்ணால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கிண்டி ஆளுநர் மாளிகையின் 2வது நுழைவாயிலில் நேற்று வழக்கம் போல் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்போது, 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அங்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, ஆளுநரை சந்தித்து மனு அளிக்க வேண்டும், என கூறியுள்ளார். ஆனால், அவர் பதற்றத்துடன் காணப்பட்டதால், அவரிடம் இருந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.

அதில், ஒரு கேனில் பெட்ரோல் இருந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதை பறிமுதல் செய்து, அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த சத்திரை கிராமத்தை சேர்ந்த மஞ்சுளா (41) என்பதும், கணவரை பிரிந்து வாழ்வதும் தெரிந்தது. அவரிடம் ஒரு கோரிக்கை மனுவும் இருந்தது. அதில், திருவள்ளூர் மாவட்டத்தில் எஸ்.பி.,யாக பணியாற்றிய அதிகாரி ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் தனக்கு அறிமுகமானார்.

இவர், என்னை காதலிப்பதாக கூறி, கடந்த 3 ஆண்டாக பழகி வந்த நிலையில், தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். நான் இறந்தால் அவர்தான் காரணம், என்று எழுதி இருந்தது. இதையடுத்து அந்த பெண்ணை சமாதானப்படுத்திய போலீசார், மனுவை நாங்கள் ஆளுநரிடம் கொடுத்து விடுகிறோம், எனக் கூறி கிண்டி மகளிர் காவல் நிலையத்தில் பெண்ணை ஒப்படைத்தனர். பின்னர், அந்த பெண்ணை கடம்பத்தூர் போலீசார் உதவியுடன், சத்திரை கிராமத்தில் வசிக்கும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

மஞ்சுளா கடந்த 2019ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தின் கவர்ச்சி விளம்பரத்தை நம்பி ரூ.5 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார். இது தொடர்பாக அப்போதைய திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் அந்த நிறுவனத்திடம் இருந்து பணத்தை பெற்று கொடுத்துள்ளனர். மேலும், இவருக்கு லேசான மனநல பாதிப்பு இருப்பதும், திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்தவரின் பெயரை, அடிக்கடி சொல்லி புலம்பி வருவதும் தெரியவந்தது.

The post கிண்டி ஆளுநர் மாளிகைக்கு பெட்ரோலுடன் வந்த பெண்ணால் பரபரப்பு: போலீசார் மடக்கி பிடித்தனர் appeared first on Dinakaran.

Tags : Guindy Governor's ,CHENNAI ,Governor's House ,Guindy ,Governor's ,House ,Guindi Governor's House ,
× RELATED டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்