×

கவர்னர் விழாவில் கருப்பு உடை அணிந்து வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: ஆர்.என்.ரவி மட்டும் கருப்பு கோட் போட்டு பங்கேற்றதால் சர்ச்சை

கோவை: கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில், ஒன்றிய அரசின் குடிமையியல் பணி தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், குடிமையியல் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி நடந்த அரங்கிற்கு கருப்பு உடையில் வந்த மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால், காவல் துறையினருடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர், பத்திரிகையாளர்கள் மட்டும் அனுமதிக்கபட்டனர். கருப்பு உடை அணிந்து வந்த மாணவ, மாணவிகளை வேறு உடை அணிந்து வரும்படி திருப்பி அனுப்பினர். போதுமான அளவில் அறைகள் ஒதுக்கப்படாததால் பலர் வாயில் முன்பாக நீண்டநேரம் கால்கடுக்க காத்து நின்றனர். கருப்பு உடை மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி கருப்பு நிற ஓவர்கோட் அணிந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

* ஊழல் பெரும் பிரச்னையாக உள்ளது: ஆளுநர் பேச்சு
விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ‘எப்போதும் அறிவு சார்ந்த விஷயங்களை தொடர்ந்து கற்க வேண்டும். நமக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நிதி மேலாண்மையை நீங்கள் நன்கு கற்றுக் கொள்ள வேண்டும். இன்று ஊழல் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. வாழ்க்கை மாரத்தான் அல்ல.

நானும் பலருடன் ஓடுகிறேன் என்பது போல எந்த துறை சென்றாலும் நேர மேலாண்மை ஒவ்வொரு நாளும் அவசியம். நாம் நமது வார்த்தைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் பேச வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்மையுடன் பணியாற்றி நாட்டின் வளர்ச்சிக்கும் உதவ வேண்டும். 2047ல் வளர்ந்த நாடாக இந்தியா மாற ஒவ்வொரு இந்தியனும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.

The post கவர்னர் விழாவில் கருப்பு உடை அணிந்து வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: ஆர்.என்.ரவி மட்டும் கருப்பு கோட் போட்டு பங்கேற்றதால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : RN ,Ravi ,Coimbatore ,Governor ,Union Government ,PSG College of Technology ,RN Ravi ,Dinakaran ,
× RELATED அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்...