×

காமராஜர் பல்கலை டெண்டர் அதிமுக ஆட்சியில் முறைகேடு: 4 மாதத்தில் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை அதிரடி கெடு

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், அதிமுக ஆட்சியின்போது நடந்த டெண்டர் முறைகேடு குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் 4 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கடந்த அதிமுக ஆட்சியின்போது 2015ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் பதவி வகித்தார்.

21.1.2015ல் தொலைநிலைக் கல்வி பாடத்திட்டம் மற்றும் தேர்வுமுறையில் மின்னணு (இ-கன்டன்ட்) முறையை செயல்படுத்த ரூ.9 கோடியே 32 லட்சத்து 89 ஆயிரத்து 500 ஒதுக்க முடிவானது. இதற்கு சிண்டிகேட் குழுவும் ஒப்புதல் அளித்தது. மின்னணு முறையில் பாடத்தையும் தேர்வுக்கான திட்டத்தையும் ஆன்லைன் மூலம் உருவாக்க ரூ.37 லட்சத்து 55 ஆயிரத்திற்கு ஒருவர் டெண்டர் கோரினார். ஆனால், பல்கலைக்கழக தரப்பினர் அவருக்கு டென்டர் பணிகளை தராமல் மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு ரூ.6 கோடிக்கு டெண்டர் கொடுத்தனர்.மற்றொரு மின்னணு முறை திட்டத்தை 2வதாக ஒரு நிறுவனம் ரூ.6 கோடியே 30 லட்சத்திற்கு டெண்டர் கோரியது.

ஆனால் அந்த நிறுவனத்திற்கு பல்கலை நிர்வாகம் டெண்டர் வழங்காமல் மற்றொரு நிறுவனத்திற்கு ரூ.7 கோடியே 80 லட்சத்து, 55 ஆயிரத்திற்கு டெண்டரை ஒதுக்கியுள்ளது. அதிக விலை கேட்ட நிறுவனத்திற்கு பல்கலை தரப்பினர் ஒப்பந்த பணிகளை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சிபிஐ மற்றும் தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளரிடம் 2015ம் ஆண்டே புகார் அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, இந்த முறைகேடுகளை சிபிஐ விசாரிக்கவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர், ‘‘மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், சிண்டிகேட் உறுப்பினர்கள், பல்கலை பதிவாளர் மீதான 2014-15க்கான தணிக்கை அறிக்கையை வைத்து மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

எனவே, 2014-15ம் ஆண்டின் தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் 4 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம், புகாரில் தொடர்புடையவர்கள் விளக்கமளிக்க வாய்ப்பு கொடுத்து விரைவாக முடிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

The post காமராஜர் பல்கலை டெண்டர் அதிமுக ஆட்சியில் முறைகேடு: 4 மாதத்தில் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை அதிரடி கெடு appeared first on Dinakaran.

Tags : Kamaraj University ,ICourt Branch ,Madurai ,Court ,Principal Secretary ,AIADMK ,Madurai Kamaraj University ,Vanjinathan ,ICourt ,
× RELATED மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2...