×

டெல்டா மாவட்டங்களில் வேளாண் பெரு வழித்தடம் அமைக்கும் பணி துவக்கம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், வேளாண் சாகுபடியே முதன்மை தொழிலாக விளங்குகின்றன. எனவே, இந்த மாவட்டங்களில் வேளாண் பொருட்களை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக்கும் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதை அரசு ஊக்குவிக்கிறது.  அதன்படி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ரூ.1,070 கோடி திட்ட மதிப்பீட்டில் ‘வேளாண் தொழில் பெருவழித்தடம்’ அமைக்க தமிழ்நாடு அரசு கடந்தாண்டு ஒப்புதல் அளித்தது.

இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டன. அதேபோல், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை ‘பேம் டி.என்’ (FaMe – TN) எனப்படும் நிறுவனம் தயாரித்து கொடுத்துள்ளது. இந்நிலையில், வேளாண் பெருவழித்தடத்திற்கான திட்ட மேலாண்மை அலகை அமைக்கும் பணியை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெற, நவீன இயந்திரங்களுடன் கூடிய பொது வசதி மையங்களும், புதிய தொழிற்பேட்டைகள், கிடங்குகளும் அமைக்கப்பட உள்ளன. அதேபோல், தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, அரசு மானியம் வழங்கப்பட உள்ளன. மேலும், தஞ்சையில் உணவு தொழில் பூங்கா, குளிர்ப்பதன கிடங்குகள், சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒட்டுமொத்தமாக வேளாண் வழித்தட பணிகளை 2027-28க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post டெல்டா மாவட்டங்களில் வேளாண் பெரு வழித்தடம் அமைக்கும் பணி துவக்கம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Delta Districts ,CHENNAI ,Thanjavur ,Tiruvarur ,Tamil Nadu government ,
× RELATED செப். 24 முதல் 29ம் தேதி வரை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு நடைபயணம்