புதுடெல்லி: இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களின் வங்கிக் கணக்குகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு சர்வதேச நிறுவனம் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. சர்வதேச நிதிச் செயல் பணிக்குழு (எப்ஏடிஎப்) என்பது தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளித்தல் மற்றும் பணமோசடி தொடர்பான விஷயங்களை கண்காணிக்கும் சர்வதேச நிறுவனமாகும். இந்நிறுவனம் பெரும்பாலான நாடுகளுக்கிடையே ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனம் ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘இந்திய அரசியல் தலைவர்கள், உயர்மட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அரசியல் தலைவர்களின் வெளிநாட்டு வங்கிகளில் நடக்கும் முதலீடுகள் மீதும் இந்திய அரசு கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் பணமோசடி தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. அதே சமயம், வழக்குகளை விரைவாக விசாரிக்கவும், அரசு சாரா அமைப்புகளை அநியாயமாக குறிவைக்கக் கூடாது’ என்று அறிவுறுத்தி உள்ளது. ஒன்றிய அரசிடம், எப்ஏடிஎப் நிறுவனம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுதொடர்பாக ஒன்றிய அரசோ, அந்த நிறுவனமோ பதில் அளிக்கவில்லை. மேலும் இதுதொடர்பாக இறுதி அறிக்கையை எப்ஏடிஎப் விரைவில் வெளியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் அரசியல் தலைவர்களின் வங்கி டெபாசிட்கள் கண்காணிக்கப்படுவதில்லை. எப்ஏடிஎப் அறிக்கை கிடைத்தால், அதன்பிறகு தேவைப்பட்டால் கண்காணிக்கப்படும்’ என்று கூறினார்.
The post இந்திய அரசியல் தலைவர்களின் வங்கிக் கணக்குகளை கண்காணிக்க வேணும்!: ஒன்றிய அரசுக்கு சர்வதேச நிறுவனம் அறிவுரை appeared first on Dinakaran.