*இடைத்தரகர் தப்பி ஓட்டம்
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று 2வது நாளாக லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. இந்த சோதனையில் சார் பதிவாளர் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ரூ.25.33 லட்சம் லஞ்சம் பெற்றது அம்பலமாகியுள்ளது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 80 முதல் 100 பத்திரங்கள் வரை பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது, ஆடி மாதம் என்பதால் பத்திரப்பதிவு குறைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவில் முறைகேடு நடப்பதாகவும், பத்திரம் பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் பெறப்படுவதாகவும், புரோக்கர் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் கோவை லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு கடந்த ஆக.8ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு துறை ஏடிஎஸ்பி திவ்யா, இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் அன்று மாலை 5.30 மணி முதல் நேற்று மதியம் 2.30 மணி வரை அதிரடி சோதனை நடத்தினர். அலுவலக வாயில் கதவை பூட்டிவிட்டு உள்ளே பணியில் இருந்த சார் பதிவாளர் சாந்தி (50), அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள், வெளி நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது, வெளிநபர்கள் யாரையும் அலுவலகத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இதேபோல் உள்ளே இருந்தவர்களையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.
தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணையில் சார்பதிவாளர் சாந்தி பொதுமக்கள் மற்றும் பத்திர எழுத்தர்களிடமிருந்து இடைத்தரகர் நவீன் குமார் (24), அவரது டிரைவர் ராஜா (35), அலுவலக ஊழியர் பிரவீன் குமார் (32) மூலமாக கடந்த ஒரு மாதமாக பல்வேறு டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் தனது வங்கி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக்கணக்குகளில் ரூ.25 லட்சத்து 33 ஆயிரத்து 880 லஞ்சமாக பெற்றது அம்பலமானது.
லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணைக்கு அலுவலகத்திற்குள் நுழையும்போதே இடைத்தரகராக செயல்பட்டு வந்த நவீன் குமார் லஞ்ச பணத்துடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் கூறுகையில், “கடந்த ஒரு மாதமாக சார் பதிவாளர் சாந்தி ரூ.25 லட்சத்து 33 ஆயிரத்து 880யை லஞ்சமாக பெற்றுள்ளார். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.
The post மேட்டுப்பாளையத்தில் 2ம் நாளாக லஞ்ச ஒழிப்பு சோதனை சார் பதிவாளர் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ரூ.25.33 லட்சம் லஞ்சம் பெற்றது அம்பலம் appeared first on Dinakaran.