சிவகங்கை, ஆக. 10: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கடுமையான வெயில் அடித்து வருகிறது. ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து பகல் நேரங்களில் சாலையில் செல்ல முடியாத அளவிற்கு வெயில் அடித்து வந்தது. மே, ஜூன் மற்றும் கடந்த மாதங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்த நிலையில் அதன் பிறகு மழை இல்லை. மேலும், வழக்கத்திற்கு மாறாக கடந்த மாதம் மற்றும் இம்மாதத்திலும் கடுமையான வெயில் அடித்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களாக மாலை முதல் இரவு வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களில் அதிகபட்சமாக மானாமதுரையில் 85மி.மீ மழை பதிவானது. காரைக்குடியில் 83மி.மீ, இளையான்குடியில் 55.4மி.மீ, சிவகங்கையில் 47மி.மீ, தேவகோட்டையில் 15.6மி.மீ, காளையார்கோவிலில் 15.4மி.மீ, திருப்புவனத்தில் 14.8மி.மீ, திருப்பத்தூரில் 11.5மி.மீ, சிங்கம்புணரியில் 5மி.மீ, மழை பதிவானது. கன மழையால் குளங்கள், கண்மாய்களுக்கு நீர் வரத்து வரத்து தொடங்கியுள்ளது. மழையில்லாமல் கண்மாய், குளங்கள் வறண்டு கிடந்த நிலையில் தற்போதைய மழை விவசாயிகள், பொதுமக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
The post மானாமதுரையில் அதிகபட்ச மழை பதிவு விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.