- தென்காசி கோயில்
- பப்புவா நியூ கினி
- தென்காசி
- தென்காசி காசி விஸ்வநாதர் கோவில்
- இந்து சமய அறநிலையத்துறை
- அமைச்சர்
- சேகர்பாபு
- தின மலர்
தென்காசி: தென்காசி காசி விசுவநாதர் கோயிலில் திருப்பணிகள் நடந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கோபுரத்தை புதுப்பிக்கும் பணிகளும், கோயில் வளாகத்தை புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோயிலில் உள்ள அம்பாள் சன்னதி, சுவாமி சன்னதி ஆகியவற்றில் உள்ள பழமையான கொடி மரங்களை மாற்ற திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர். இதையடுத்து வர்த்தக சங்க முன்னாள் தலைவர் அழகர் ராஜா, ஸ்ரீராம் நிறுவனங்களின் அதிபர் சுரேஷ் ராஜா ஆகியோர் தங்களது சார்பில் புதிய கொடிமரத்தை உபயமாக வழங்குவதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அருகிலுள்ள பப்புவா நியூ கினியா நாட்டிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் சுமார் 45 அடி உயரம் உள்ள இரண்டு வேங்கை மரங்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி கொண்டுவரப்பட்டன.
பின்னர் அங்கிருந்து பிரானூர் பார்டர் மர ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டு மரத்தில் உள்ள வெள்ளைப் பகுதிகள் நீக்கி சதுர வடிவிலான மரமாக செதுக்கி நேற்று கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. டாரஸ் லாரி மற்றும் கிரேன் உதவியுடன் கோயில் முன்பு இறக்கி வைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து கோயில் பணியாளர்கள், சிவனடியார்கள், உபயதாரர்கள் உதவியுடன் பூஜைகள் நடத்தி கோயில் வளாகத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது. இனி ஆகம விதிகளின் படி சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி ஆகியவற்றில் தேவையான உயரத்திற்கு உருளை வடிவ கொடி மரமாக மாற்றப்பட்டு கொடிமரம் நிறுவப்படும்.
The post பப்புவா நியூ கினியா நாட்டில் இருந்து தென்காசி கோயிலுக்கு வந்த கொடி மரம் appeared first on Dinakaran.