×

தமிழ்ப் புதல்வன் திட்டத்தை சென்னையில் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்: முதற்கட்டமாக 135 கல்லூரிகளில் 10,304  மாணவர்கள் பயன்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாணவர்களுக்கான தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை கிண்டி, அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா கூட்டரங்கத்தில் மாணவர்களுக்கு பற்று அட்டைகளை வழங்கி ‘‘தமிழ்ப் புதல்வன் திட்டத்தை” தொடங்கி வைத்தார்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்கிற “புதுமைப்பெண்” திட்டத்தை தொடர்ந்து மாணவர்களுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 6 முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அவர்கள் உயர் கல்வி பயிலும் போது தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் பயனடையலாம். சென்னை மாவட்டத்தில் முதற்கட்டமாக 135 கல்லூரிகளில் 10,304 மாணவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக இத்திட்டத்தின் மூலம் ரூ.1000 பற்று வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பல்வேறு துறை மாணவர்கள் பயனடைகின்றனர். இத்திட்டமானது பள்ளி கல்வித் துறை, உயர் கல்வித் துறை, வங்கித் துறை மற்றும் சமூக நலத் துறை மூலம் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படுகிறது.

இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு (மயிலாப்பூர்), ஜே.எம்.ஹச். ஹசன்மௌலானா (வேளச்சேரி), ஏ.எம்.வி.பிரபாகர ராஜா(விருகம்பாக்கம்), ஜோசப் சாமுவேல் (அம்பத்தூர்), துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மாவட்ட சமூக நல அலுவலர்கள் ம.ஹரிதா, முத்துச்செல்வி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் த.தனராஜ் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்ப் புதல்வன் திட்டத்தை சென்னையில் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்: முதற்கட்டமாக 135 கல்லூரிகளில் 10,304  மாணவர்கள் பயன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Coimbatore district ,Minister of ,Hindu ,Religion and Charities ,Chennai district ,PK Shekharbabu ,Anna University Vivekananda ,Kotorang ,Guindy ,Dinakaran ,
× RELATED இறை நம்பிக்கை கொண்டவர்கள்...