நெல்லை: ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த பாளை., அண்ணாநகரில் வசித்து வந்த குமார் என்பவருக்கும், ராதாபுரத்தைச் சேர்ந்த டாக்டர் பாலமுருகன் என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இதனால் அவரை கொலை செய்ய கடந்த 2018ம் ஆண்டு பிப்., 26ம் தேதி ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டை அவரது வீட்டின் மீது வீசியது. அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த அந்த கும்பல் குமாரின் மருமகனான கல்லூரி பேராசிரியர் செந்தில்குமார் என்பவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இந்த கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 13 பேரை போலீசார் கைது செய்து நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராக ராக்கெட் ராஜா, பாலகணேசன், பாலமுருகன், ராஜசேகர், மைக்கேல் அஸ்வின், கார்த்திக் என்ற சுரேஷ்குமார், பிரவின்ராஜ், முனியசாமி, மொட்டையன் என்ற மொட்டைசாமி, அந்தோணி, ராஜா என்ற புரோட்டா ராஜா, நட்டு என்ற நடராஜன், அருண்பாபு ஆகிய 13 பேரை நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் அந்த வழக்கு நெல்லை மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் அருண்பாபு என்பவர் மட்டும் செந்தில்குமார் வழக்கு விசாரணைக்கு ஆஜரானார். ராக்கெட் ராஜா உட்பட 12 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதையடுத்து நீதிபதி சுரேஷ்குமார் வழக்கு விசாரணையை வருகிற 27ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
The post கல்லூரி பேராசிரியர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜா மீதான விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.