×

NITயில் படித்த முதல் பழங்குடியினப் பெண்!

நன்றி குங்குமம் தோழி

JEE தேர்வில் தேர்ச்சிப் பெற்று, முதல் முறையாக திருச்சி NITயில் இடம் கிடைத்து, அதில் தன் பட்டப் படிப்பினை முடித்தவர்தான் சபிதா. இவர் ஒரு பழங்குடியினப் பெண். பொதுத்தேர்வில் பள்ளியிலேயே முதலிடம் பிடித்து மருத்துவராகும் கனவோடு இருந்தவர் NEET தேர்வோடு சேர்ந்து JEEயும் எழுதினார். அதில் JEEயில் தேர்ச்சிப்பெற்று பழங்குடி மக்களிலேயே முதல் முறையாக NITயில் படிக்கும் வாய்ப்பை பெற்றார். தற்போது மங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கும் சபிதாவிடம் பேசும் போது…

‘‘எனக்கு சொந்த ஊர் கோவையில் உள்ள காளியூர் என்ற பழங்குடி கிராமம். எனக்கு இரண்டு அக்கா ஒரு தம்பி. எங்க வீட்டில் என்னை ‘நீ நல்லா படிக்கணும்’னு சொல்லிட்டே இருப்பாங்க. என் அப்பாவும் ‘கல்விதான் முக்கியம். அதுதான் நமக்கான ஒரு அடையாளத்தை ெகாடுக்கும்னு அடிக்கடி சொல்வார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என் மனதில் ஆழமாக பதிந்தது. அதனால் நானும் நல்லா படிச்சேன். நான் படிக்கும் போது எங்க ஊர்ல பேருந்து வசதிகள் கிடையாது. சொல்லப்போனால் கடைகள் கூட இருக்காது. படிப்பு சம்பந்தமா புத்தகம் வாங்கணும் என்றாலும் பக்கத்து ஊருக்குதான் செல்ல வேண்டும். பள்ளிக்கூடமும் எங்க ஊரில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம்.

பஸ் வசதி இல்லாததால், நடந்தேதான் போயிட்டு வருவேன். நான் நான்காம் வகுப்பு படிக்கும் போதுதான் எங்க ஊருக்கு பஸ் வந்தது. அதுவும் எங்க ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து போராட்டம் நடத்திதான் அந்த வசதியும் கிடைச்சது. என் அப்பா மட்டுமில்லை எங்க ஊர் மக்கள் அனைவரும் தங்களின் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்றுதான் விரும்பினாங்க. அதனால் நாங்க எல்லோரும் என்னதான் எங்க வீட்டில் வறுமை சூழல் இருந்தாலும் படிக்க வேண்டும் என்பதில் எங்க ஊர் மாணவர்கள் எல்லோரும் உறுதியா இருந்தோம். அப்படி இருக்கும் போது எனக்கு மட்டும் எப்படி அந்த ஆர்வம் இல்லாமல் இருக்கும். என் வாழ்க்கையை மாற்றுவதற்கான ஊடகமாக படிப்பைதான் பார்த்தேன்.

நான் நன்றாக படித்தேன். அதன் பலனாக பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து முதல் மாணவியாக வந்தேன். பழங்குடியின மக்களில் இருந்து பள்ளி அளவில் முதல் மாணவியாக தேர்வானதால் எனக்கு மாவட்ட ஆட்சியர் விருது ஒன்றையும் கொடுத்தார். பத்தாம் வகுப்பிற்கு பிறகுதான் என்ன படிக்கலாம் என்பது எனக்குள் ஒரு கேள்வியாகவே இருந்தது’’ என்றவர், அவருக்கு கிடைத்த வாய்ப்பினைப் பற்றி பகிர்ந்தார்.

‘‘நான் 10ம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்து தேர்வானதால் எனக்கு அரசு சார்பில் ஒரு அழைப்பு வந்தது. எனக்குப் பிடித்த படிப்பை எந்தப் பள்ளியில் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கலாம், அதற்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என்பதுதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அப்படிப்பட்ட அழைப்பு வந்தும் என் குடும்பச் சூழல் காரணமாக என்னால் அரசு கொடுத்த வாய்ப்பினை ஏற்று படிக்க முடியாமல் போனது. அதனால் நான் படித்த பள்ளியிலேயே +1ல் சேர்ந்தேன். எனக்கு மருத்துவராக வேண்டும் என்பதுதான் ஆசை என்பதால் அதற்கான வகுப்பினை தேர்வு செய்து படிச்சேன்.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், ஜப்பான்-ஆசிய மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளை தேர்வு செய்து, ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில் நுட்பக்கழகத்தின் மூலம் ஜப்பானுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள். நான் அறிவியலில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்ததால், தமிழ்நாடு அளவில் 6 மாணவிகளில் நானும் ஒரு மாணவியாக தேர்வானேன். பதினைந்து நாட்கள் ஜப்பான் சென்று அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினை பார்வையிட்டு வந்தேன்.

அதன் பிறகு மருத்துவம் படிக்க வேண்டும் என்பதால், +2வில் நீட் தேர்வுக்காக தயாராகத் தொடங்கினேன். சென்னையில் நீட் தேர்வுக்கான பயிற்சியில் சேர்ந்து மூன்று மாதங்கள் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதற்காக சென்னை வந்து பயிற்சி எடுத்தேன். ஆனால் என்னால் அதில் தேர்ச்சிப்பெற முடியவில்லை. அப்போதுதான் JEE தேர்வு குறித்து தெரிந்து கொண்டேன். உடனே அதற்கு விண்ணப்பித்து, தேர்ச்சிப் பெற்று திருச்சியில் உள்ள NITயில் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் ஒரு செமஸ்டருக்கு 1 லட்சத்திற்கும் மேல் கட்டணம் கட்ட வேண்டும். அவ்வளவு பணம் கட்டக்கூடிய சூழலில் எங்க குடும்பம் இல்லை. வாய்ப்பு கிடைத்தும் மேற்கொண்டு படிக்க முடியாத சூழ்நிலையில் இருந்தேன். அப்போது கேரளாவில் நடிகர் மோகன்லாலின் கல்வி நிறுவனத்தில், படிக்க ஆர்வம் இருந்தும் நிதி பற்றாக்குறை காரணமாக படிக்க இயலாத ஏழை மாணவர்களுக்கு படிப்பதற்காக உதவி செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டு விண்ணப்பித்தேன். அவர்கள் என் கல்விச் சான்றிதழ்களை பார்த்து என்னுடைய படிப்பிற்கான செலவினை ஏற்றுக்கொண்டார்கள். முதல் செமஸ்டருக்கான கட்டணம் போக மீதி செலவுகளை கல்வி நிறுவனமே ஏற்றுக்கொண்டது’’ என்றவர் படிப்பு மட்டுமில்லை விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கியுள்ளார்.

‘‘எனக்கு கபடி விளையாட்டில் தனிப்பட்ட ஆர்வம் உண்டு. அதனால் கல்லூரியில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டேன். அதில் நான் நன்றாக விளையாடியதால், கல்லூரி அளவில் NITக்களுக்கிடையே நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். படிப்பு, விளையாட்டு என இரண்டிலும் என் கவனம் இருந்தது. படிப்பு முடிந்ததும் கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில், மங்களூரில் உள்ள கார்கோ நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

படித்தால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் எனச் சொல்வார்கள். என் வாழ்க்கையில் அது உண்மையானது. பொதுவாக எல்லோ ருக்கும் கல்வி முக்கியம். அது வாழ்க்கையில் முன்னேற்றத்தினை கொடுக்கும். குறிப்பாக எங்க இன மக்களுக்கு. அதற்கு நானே ஒரு உதாரணம். நான் நன்றாக படித்து இப்போது நல்ல வேலையில் இருக்கிறேன். என் இன மக்களுக்கு நானே ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறேன் என்று நினைக்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கு.

மருத்துவராக வேண்டும் என விரும்பினேன். ஆனால் பொறியாளராகிவிட்டேன். கனவுகளை அடைய முடியவில்லை என்றாலும், கல்வி இருந்தாலே நம் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படும். இந்த வெளிச்சம் என்னோடு நிற்காமல் என் சமூகத்தில் இருக்கும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமென நினைக்கிறேன்’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார் சபிதா.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post NITயில் படித்த முதல் பழங்குடியினப் பெண்! appeared first on Dinakaran.

Tags : NIT ,Shabita ,Trichy Niti ,NITI ,Dinakaran ,
× RELATED திருச்சி NIT விவகாரம் : மாணவிகளிடம்...