*அமைச்சர்கள் வழங்கினர்
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற 22 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.92,000 பரிசுக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடந்தது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பரிசுத்தொகை வழங்கினர். இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.
இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களிடையே கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. நம் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் கருத்துகளையும் சமூக சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் அவர்களின் பிறந்தநாள்களை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறையால் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றன.
அவ்வறிப்பின் படி 2024ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா தொடர்பில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது.அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000, சிறப்பு பரிசு ரூ.2000, கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000, சிறப்பு பரிசு ரூ.2000 எனவும், தமிழ்நாடு நாளை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாகரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்பட்டது.
பேச்சுப் போட்டிகளில் பள்ளிமாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.10.000, இரண்டாம் பரிசாகரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000, எனவும் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் என வெற்றி பெற்ற 22 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.92,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (தமிழ் வளர்ச்சித்துறை) இளங்கோ, மாநகராட்சி 4 வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post கலைஞர் பிறந்தநாளையொட்டி நடந்த பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை appeared first on Dinakaran.