*உடனுக்குடன் சீரமைத்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்
ஊட்டி : ஊட்டியில் நேற்று முன்தினம் பெய்த திடீர் மழை காரணமாக அவலாஞ்சி சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனை உடனுக்குடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சீரமைத்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.மேலும், நீலகிரி மாவட்டத்தில்கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
இதனைத் தொடர்ந்து மழை பாதிப்பை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து துறைகளும் உஷார் நிலையில் வைத்திருந்தது. ஆனால், கன மழை பெய்யவில்லை. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் குந்தா போன்ற பகுதிகளில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீர் கன மழை பெய்தது.இந்த கன மழை காரணமாக ஊட்டியில் இருந்து அவலாஞ்சி செல்லும் சாலையில் மஞ்சனக்கொரை அருகே சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் இவ்வழி தடத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் தலைமையில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் அங்கு சென்று சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன.மேலும் வாகனங்கள் செல்ல ஏற்றவாறு ஜேசிபி இயந்திரம் மூலம் அப்பகுதியில் சாலை அகலப்படுத்தப்பட்டது. இதனால் வழக்கம் போல் வாகனங்கள் இவ்வழித்தடத்தில் சென்றன.
The post ஊட்டியில் திடீர் மழை அவலாஞ்சி சாலையில் மண் சரிவு appeared first on Dinakaran.