×
Saravana Stores

118 ஆண்டுகளுக்கு பிறகு செப்.8ல் மஹா கும்பாபிஷேகம் மானூர் அம்பலவாணர் கோயிலில் பந்தக்கால்நாட்டு வைபவம் கோலாகலம்

*ரூ.69 லட்சத்தில் திருப்பணி வேலைகள் மும்முரம்

நெல்லை : மானூர் அம்பலவாணர் கோயிலில் சுமார் 118 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் செப்.8ம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு பந்தக்கால் நாட்டு வைபவம் நேற்று நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி பாய்ந்து வளம் கொழிக்கும் நெல்லைக்கு புகழ் சேர்க்கும் வகையில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலுடன் இணைந்த அம்பலவாணர் கோயில் மானூரில் திகழ்கிறது. தனித்துவமிக்க இக்கோயிலில் மூலவர் நெல்லையப்பர், அம்பாள் காந்திமதியும் சிறப்பு சன்னதிகளாக அம்பலவாணசுவாமி, கருவூர் சித்தர், திருவாளி போத்தி சன்னதிகளும் உள்ளன. இங்கு வாழ்ந்த அம்பலவாண முனிவருக்கு சுவாமி நெல்லையப்பர் திருநடன காட்சி புரிந்த தலமாகவும், ஆமை, அன்னப்பறவைக்கு சாபவிமோசனம் வழங்கிய தலமாகவும் விளங்கி வருகிறது. நெல்லையப்பருக்குரிய ஆறு சபைகளில் ஒன்றான ஆச்சார்ய சபை இத்தலத்தில் அமைந்துள்ளது சிறப்பானதாகும்.

இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆவணி மூலத்திருவிழா முக்கியமானது. இத்திருவிழாவின் கடைசிநாளில் நெல்லையப்பர், காந்திமதிஅம்பாள் காட்சி கொடுக்கும் வைபவம் சிறப்பு வாய்ந்தது. இத்தகைய சிறப்புக்களை உடைய மானூர் அம்பலவாணர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து சுமார் 117 ஆண்டுகள் கடந்த நிலையில் பல்வேறு திருப்பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.69 லட்சம் ஒதுக்கீடு செய்தது. அந்நிதியின் கீழ் கும்பாபிஷேக திருப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தற்போது பெரும்பாலான திருப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. கோயில் மண்டபங்கள் சுண்ணாம்பு கொண்டு வெள்ளை அடிக்கப்பட்ட நிலையில் தற்போது நடைபெறும் திருப்பணியின் போது பழமை மாறாமல் கல்மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் கோயிலில் அதிகளவில் வரையப்பட்டுள்ள மூலிகை ஓவியங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. குறிப்பாக நடராஜர் திருநடன காட்சியை விளக்கும் ஓவியம் காண்போரின் கவனத்தை ஈர்த்தது. தற்போது இந்த ஓவியங்களை பழமை மாறாமல் மூலிகையால் மீண்டும் வரைய கேரள ஓவியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அனைத்து திருப்பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளதால் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன.

இதையடுத்து அம்பலவாணர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா செப்.7ம் தேதி துவங்கி 8ம்தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை 9 மணிக்கு நடந்தது. இதையொட்டி சிறப்பு பூஜைகளை பிச்சையா பட்டர் நடத்தினார்.

இதில் டவுன் நெல்லையப்பர் கோயில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, ஆய்வாளர் பர்வின்பாபி, கோயில் கணக்காளர் வெங்கடேசன், தேரடியப்பன் மற்றும் கோயில் பணியாளர்கள் சுப்பிரமணியன், வேலுச்சாமி, சிவன்பெருமாள், மானூர் பஞ்சாயத்து தலைவர் பராசக்தி செல்வன்துரை மற்றும் கிராம மக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post 118 ஆண்டுகளுக்கு பிறகு செப்.8ல் மஹா கும்பாபிஷேகம் மானூர் அம்பலவாணர் கோயிலில் பந்தக்கால்நாட்டு வைபவம் கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Maha ,Kumbabhishekam ,Manoor ,Ambalavanar Temple ,Bandhakalnatu Vaibhavam Kolakalam ,Nellai ,Bandhakal Nathu Vaipavam ,Maha Kumbabhishek ,Manur Ambalavanar temple ,Maha Kumbabhishekam Manoor Ambalavanar Temple ,Bandhakalnatu Vaiphavam Kolakalam ,
× RELATED கன்னிகைப்பேர் கிராமத்தில் நாகாத்தம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்