×

செல்போன்களை விழிப்புடன் பயன்படுத்துங்கள்

*மாணவிகளுக்கு எஸ்பி பாலாஜி சரவணன் அறிவுரை

தூத்துக்குடி : செல்போன் பயன்படுத்தும் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மாணவிகளுக்கு எஸ்பி பாலாஜி சரவணன் அறிவுறுத்தினார். தூத்துக்குடி பள்ளியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமை வகித்து பேசுகையில், கல்வி கற்பதற்கு வறுமை என்பது தடையாக இருக்கக் கூடாது. மாணவிகளான நீங்கள் எப்பொழுதும் நம்மால் முடியாதது எதுவுமில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். தோல்வி ஏற்படும்போது துவண்டுவிடாமல் அதிலிருந்து அனுபவத்தை கற்றுக் கொள்ள வேண்டும். தோல்வியே உங்களை பக்குவப்படுத்தி சிறந்த வெற்றியாளராக மாற்றும்.

செல்போன் பயன்படுத்தும் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உங்களது புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும். அப்படி உங்களது புகைப்படம் மற்றும் வீடியோவை வைத்து யாராவது மிரட்டினால் தயங்காமல் காவல் துறையினருக்கு புகார் தெரிவிக்கலாம். இதனால் மிரட்டிய நபருக்கு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் படி 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றுத் தர முடியும்.

மேலும் புகார் அளிப்பவர்களின் விவரமும் ரகசியமாக வைக்கப்படும். எப்போதும் உங்களுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர் கூறுவதின்படி நடக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கல்வி கற்பதை நிறுத்த கூடாது. தேவையில்லாத பொறாமை, கோபம் போன்றவற்றை தூக்கி எறியுங்கள். எப்பொழுதும் தன்னம்பிக்கை மற்றும் பிறருக்கு உதவும் எண்ணத்துடன் இருந்து வாழ்க்கையில் மிகபெரிய வெற்றியாளராக மாற வேண்டும், என்றார். தொடர்ந்து தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

The post செல்போன்களை விழிப்புடன் பயன்படுத்துங்கள் appeared first on Dinakaran.

Tags : SP ,Balaji Saravanan ,Thoothukudi ,Tuticorin School ,Dinakaran ,
× RELATED திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் மக்கள்...