×

தமிழக மீனவர்களை கைது செய்து அத்துமீறலில் ஈடுபட்டு வரும் சிங்களக் கடற்படைக்கு இந்தியா கடுமையான பாடம் புகட்ட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சென்னை: மீனவர்கள் 32 பேரை கைது செய்த இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கு இந்தியா பாடம் புகட்டப் போவது எப்போது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில், இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியிலிருந்து வங்கக்கடலுக்கு நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 32 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களின் 4 நாட்டுப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த ஜூன் 16-ஆம் தேதி முதல் தான் தமிழக மீனவர்கள் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்பாண்டில் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த மீனவர்களில் 13 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் 32 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த 50 நாட்களில் மட்டும் தமிழக மீனவர்கள் 109 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது.

அவர்களில் 52 பேர் மட்டுமே விடுதலை செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 57 பேரும் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களில் படகு ஓட்டுனர்கள் மூவருக்கு தலா ரூ.40 லட்சம் வீதம் இலங்கை நீதிமன்றம் அபராதம் விதித்திருக்கிறது; உடனடியாக அபராதம் செலுத்தாவிட்டால் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது. ஏற்கனவே இரண்டாவது முறையாகவும், மூன்றாவது முறையாகவும் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களுக்கு 6 மாதம் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிப்பதற்காக இத்தகைய உத்திகளை இலங்கை பயன்படுத்துகிறது.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கை பன்னாட்டு விதிகளுக்கு எதிரானது. இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. இத்தகைய சூழலில் தமிழக மீனவர்களை கைது செய்து தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் சிங்களக் கடற்படைக்கு இந்தியா கடுமையான பாடம் புகட்ட வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழக மீனவர்களை கைது செய்து அத்துமீறலில் ஈடுபட்டு வரும் சிங்களக் கடற்படைக்கு இந்தியா கடுமையான பாடம் புகட்ட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : India ,Sinhalese navy ,Anbumani Ramadas ,Chennai ,Sri Lanka Navy ,Bhamaka ,
× RELATED சென்னை வெள்ளத் தடுப்பு திட்டங்கள்...