×

மைசூர் அரண்மனையில் ஒரு காயத்ரி கோயில்

மைசூர் நகரம், காலம் காலமாக கலாசார வழிபாட்டின் சின்னமாக விளங்கி வருகிறது. நுண்கலைகளில் வல்லவர்களை ஆதரித்தும் வருகிறது. மைசூர் ராஜ்யம், 1399-ஆம் ஆண்டு முதல் 1947 வரை உடையார்களால் ஆளப்பட்டு வந்தது. அதன் கடைசி மன்னர் ஜெயசாம்ராஜ உடையார். இவர் சிறந்த காயத்ரி தேவியின் பக்தர். இதனால் 1951ல் காயத்ரிக்கு ஒரு கோயில் அரண்மனை வளாகத்தில் கட்ட ஆரம்பித்தார். 1953ல் கட்டி முடித்து, அவரே திறந்தும் வைத்தார். அரண்மனை வளாகத்தில் உள்ள கோயில்கள் மற்றும் பல இடங்களில் உள்ள சிற்பங்களை அழகுற செய்த பெருமை திரு.சிங்கலிங்கேஷ்வரா சுவாமிக்கு உண்டு. இவர் மன்னரின் அபிமான சிற்ப வல்லுனர். இதனால், காயத்ரி கோயில் சிற்ப வேலைகளையும் மன்னர் அவரிடமே கொடுத்தார்.

ஆனால், அவர் தன் சீடர் பசவண்ணாவிடம் ஒப்படைக்கச் சொன்னார். பசவண்ணா 20 வருடங்களுக்கும் மேல் அனுபவமிக்கவர். காயத்ரி, பிரம்மாவின் இரண்டாவது மனைவி. அறிவு, தூய்மை மற்றும் நல்லொழுக்கத்தின் சக்தி. நான்கு வேதங்கள் பிரம்மாவின் விருப்பத்தின் பேரில் காயத்ரி மூலமாக மனித குலத்திற்கு கிடைத்தவை. காயத்ரி மந்திரம், மத் பாகவதத்தில் உள்ளது. விஸ்வாமித்ரரால் ஓதப்பட்டதாக கூறப்படுகிறது.

“ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்’’

முற்றிலும் சம நிலையான குணங்களை கொண்டவர்கள் உச்சரித்தால் சர்வ பலன் களையும் அளிக்கவள்ளது. தீட்சை பெற்றவர்கள் கூறும் போது, மேலும் சக்தி கிட்டுமாம். கோயில்களில் “காயத்ரி ஹோமம்’’ பிரதானம். இனி கோயிலை பற்றி சிந்திக்கலாம். இந்த கோயில் அசப்பில் அரண்மனையின் வடகிழக்கு பகுதியில் உள்ள திரு நயனேஸ்வர ஸ்வாமி கோயில் போன்றே இருக்கும். அதே பாணியில் நம்மை மொட்டை கோபுரம் வரவேற்கிறது.

கோயிலை சுற்றி உயரமான சுற்றுச்சுவர் உள்ளது. அதன் மையத்தின் உச்சியின் மீது மாடம் உள்ளது, அதனுள் காயத்ரி தேவி உள்ளார். அதன்மீது கோட்டையில்லை. கோயில் எனக் காட்ட கலசங்களுடன் கூடிய மிக சிறிய கோபுரம் உள்ளது. உள்ளே செல்கின்றோம். முதலில் பலிபீடம். அடுத்து துஜஸ்தம்பம் அவற்றை கடந்து சென்றால் நாலுகால் சிறு மண்டபத்துடன் கூடிய நுழைவு வாயில், அடுத்து சபாமண்டபம். அதனுள் வலது பக்கம் ருத்ரன், கணபதி உள்ளனர். இடது புறம் சூரியன் மற்றும் விஷ்ணு. மகரயாளிகளும் உள்ளன.

கர்ப்ப கிரகத்தின் வெளியே இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். உள்ளே பஞ்ச முக காயத்ரி தேவி. வலது பக்கக் கைகளில் பத்மா, சக்ரா, கயிறு, அங்குசம் மற்றும் அபயஹஸ்தம். இடது பக்க கைகளில் தாமரை, சங்கு, மண்டை ஓடு, வாள் மற்றும் வரம் வைத்து அமர்ந்துள்ளார். கண்களில் கனிவு. எப்பவும் உதவ காத்திருப்பது போல் பார்வை. காயத்ரியின் வலது புறத்தில் சாவித்திரி. நான்கு கைகள், வலது கரங்களில் திரிசூலம் மற்றும் ஜபமாலை. இடது கையில் அக்னி மற்றும் பறை. இந்த சாவித்திரி ரிஷப வாகனத்தில் அமர்ந்துள்ளார்.

இடது பக்கம் சரஸ்வதி. நான்கு கைகள், வலது பக்க கைகளில் வட்டு, தாமரை. இடது கைகளில் சங்கு, கதாளம். இந்த அம்மன் விஷ்ணுவை நினைவு படுத்தும் வகையில் கருடன் மீது அமர்ந்திருக்கிறார். மிக கம்பிரம். இந்த தேவியரை கண் குளிர பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு. இவற்றை செய்த சிற்பிக்கு மன்னர் வியந்து முதல் பதக்கம், தங்க சில்லி, வெள்ளி சுத்தியல் மற்றும் தங்க சங்கிலி பரிசாக வழங்கினாராம். கர்ப்பகிரகத்திற்கு வெளியே விமானம் எழுந்துள்ளது. கோயிலின் மேற்கட்டு மானம் கல்லிலும்; பிராகாரம் செங்கல் மற்றும் சுண்ணாம்பு சாந்தால் கட்டப்பட்டுள்ளது.

கோயில் திறப்பு: காலை 10-12 மாலை:-6.30-8மணி. தொடர்புக்கு: 09035002234.
எப்படி செல்வது: பெங்களுரு – மைசூர் 144 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

தொகுப்பு: ராஜி ராதா

The post மைசூர் அரண்மனையில் ஒரு காயத்ரி கோயில் appeared first on Dinakaran.

Tags : Gayatri temple ,Mysore Palace ,Mysore ,Jayasamraja ,
× RELATED தன் மீதான முடா வழக்கை எதிர்த்து...