×

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மழைநீர் கால்வாய்க்குள் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளர்கள்

அண்ணாநகர்: திருமங்கலத்தில் பாதுகாப்பு உபகரணங்களின்றி மழைநீர் கால்வாய்க்குள் இறங்கி, தொழிலாளர்கள் சுத்தம் செய்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, மழைநீர் கால்வாய் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மேலும், ஏற்கனவே உள்ள மழைநீர் கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, சென்னை திருமங்கலம் 100 அடி சாலையில் உள்ள மழைநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.  இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் முககவசம், கையுறை, ஒளிரும் தன்மை கொண்ட ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் கால்வாய்க்குள் இறங்கி, வெறும் கைகளால் கசடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தொற்று நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளதுடன், விஷவாயு தாக்கும் அபாயம் உள்ளது.

கால்வாய்களில் மனிதர்களை ஈடுபடுத்தி தூய்மை பணி மேற்ெகாள்ள கூடாது. தவிர்க்க முடியாத பட்சத்தில், இந்த பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் கட்டாயம் வழங்கப்பட வேண்டும், என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதை மீறி தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் கால்வாயை சுத்தம் செய்து வருகின்றனர். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மழைநீர் கால்வாய்க்குள் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Tirumangalam ,Southwest Monsoon ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED 10 வயது சிறுமிக்கு டார்ச்சர்: 17 வயது சிறுவன் கைது