- மஜி அமைச்சர்
- கே. பி. ஆதிமுக
- அன்பாகன்
- தர்மபுரி
- ஆதிமுகா
- மாவட்டம்
- தர்மபுரி மாவட்ட நிர்வாக ஆலோசனை சந்திப்பு
- குண்டலபதி
- தின மலர்
தர்மபுரி: தர்மபுரியில் நேற்று நடந்த அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், சலசலப்பு ஏற்பட்டு, இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், குண்டலப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று மதியம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் தொமு.நாகராஜன் தலைமை வகித்தார். இதில், தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சருமான கேபி.அன்பழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள், கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், தேர்தல் தோல்வி குறித்து தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். அப்போது, தர்மபுரி மாவட்ட முன்னாள் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சங்கர் பேசுகையில், ‘முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி.அன்பழகன், 1996ம் ஆண்டுதான் அதிமுகவிற்குள் வந்தார். எங்கள் குடும்பம் பரம்பரை, பரம்பரையாக அதிமுகவில் இருக்கிறது. ஆனால் 1996ல் வந்த கேபி.அன்பழகன் எல்லா பொறுப்புகளையும் அவரே வைத்துக் கொண்டார். இது எத்தனை பேருக்கு தெரியும்?,’ என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது, குறுக்கிட்ட கேபி.அன்பழகன், ‘நான் எப்போது கட்சிக்கு வந்தேன் என்று கட்சியில் இருக்கும் மூத்தவர்களை கேட்டு தெரிந்து கொள். இது போன்று பேசக்கூடாது’ எனக் கூறி, சங்கரை உடனடியாக மேடையை விட்டு கீழே இறங்கும்படி கூறினார். அப்போது, சங்கரின் உறவினரான அதிமுக மாநில விவசாய பிரிவு அமைப்புச் செயலாளர் டிஆர்.அன்பழகன், அவர் கருத்து சொல்ல உரிமை உள்ளது என்று, சங்கருக்கு ஆதரவாக பேசினார். இதனால் டிஆர்.அன்பழகனுக்கும், கேபி.அன்பழகனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, இருவரும் ஒருமையில் பேசிக்கொண்டனர்.
இதை கண்ட மேடையின் முன் இருக்கையில் இருந்த இருதரப்பு ஆதரவாளர்கள், இரண்டு கோஷ்டிகளாக மாறி மேடையில் ஏறி வாக்குவாதம் செய்தனர். மேலும், அனைவரும் முற்றுகையிட்டதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்ஆர் வெற்றிவேல், சங்கர் அவருடைய கருத்தை கூறியுள்ளார். அதற்கு மாவட்ட செயலாளர் பதில் கூறியுள்ளார். அதற்குள் நீங்கள் ஏன் இருக்கையை விட்டு ஏழுந்து வருகிறீர்கள். நீங்கள் வருவதால்தான் சண்டை ஏற்பட்டது போல் உள்ளது. நீங்கள் இருக்கையில் அமருங்கள் என்றார். பின்னர், இருதரப்பையும் சமரசப்படுத்தினார். அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பும், தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* ‘என் பணி சரியில்லை என்றால் மாற்றலாம்’: கே.பி.அன்பழகன் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து கட்சியினரிடையே, முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன் பேசியதாவது: எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியதில் இருந்தே நான் கட்சியில் உறுப்பினராக உள்ளேன். நான் எப்போதும் ஒரே மாதிரியே எல்லாரையும் மதிக்கக் கூடியவன். இந்த கூட்டத்தில், மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என கூறினர். இதை செய்ய வேண்டியது பொதுச் செயலாளரின் பணி. அதாவது, கேபி.அன்பழகன் பணி சரியில்லை என்றால், இரண்டு அல்ல மூன்றாகவே மாவட்டத்தை பிரிக்கலாம். என்னை எடுத்து விட்டு வேறு ஒரு நபரை மாவட்ட செயலாளராக போட்டால் கூட, நான் சாதாரண உறுப்பினராக இருந்து கடைசி வரை இயக்கத்திற்காக உழைப்பேன். பதவி சுகம் அனுபவித்து விட்டு, இந்த இயக்கத்திற்கு துரோகம் செய்ய மாட்டேன். நான் எம்எல்ஏவாக இருந்த போது, என்னை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து எடுத்தார்கள். ஆனாலும் எந்த கிராமங்களில் கட்சி நிகழ்ச்சி நடந்தாலும், நான் போய் கலந்து கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.
The post எல்லா பொறுப்புகளையும் நீங்களே வைத்துக் கொள்வீர்களா? மாஜி அமைச்சர் கே.பி.அன்பழகனுடன் அதிமுக நிர்வாகிகள் மோதல், தள்ளுமுள்ளு: தர்மபுரி ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.