×
Saravana Stores

கொச்சுவேளி அல்லது திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுமா? குமரி மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோவில் பக்தர்கள் அதிக அளவில் சென்று பார்வையிடும் புனித யாத்திரை தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் திருவிழா காலங்களில், தெற்கு ரயில்வே வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

தற்போது குமரி மாவட்டத்தில் இருந்து வேளாங்கண்ணி கோவிலுக்கு செல்ல நேரடி ரயில் வசதி இல்லை. ஒரு ரயிலில் பயணம் செய்து திருச்சி சென்றுவிட்டு அங்கிருந்து வேளாங்கண்ணி செல்லுவதற்கும் காலஅட்டவணையில் இணைப்பு ரயில் சேவையும் இல்லை. இதனால் திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட பயணிகள் பேருந்துகளிலும், தனியார் வேன்களிலும் பயணிக்கின்றனர்.
கிறிஸ்தவர்களின் புனித இடமான வேளாங்கண்ணி கோவில் ஆண்டு திருவிழா ஆகஸ்ட் மாதம் 29 ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 9ம் தேதி முடிகிறது. இந்த திருவிழாவிற்கு திருவனந்தபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இருந்தும் மிக அதிகமான பக்தர்கள் சென்று வருவதை பார்க்க முடிகிறது.

தற்போது இயக்கப்பட்டு வரும் எர்ணாகுளம் -வேளாங்கண்ணி வாரம் இருமுறை ரயில் கோட்டையம், காயம்குளம், கொல்லம், புனலூர், செங்கோட்டை, ராஜபாளையம், விருதுநகர், மானாமதுரை, காரைகுடி, பட்டுகோட்டை வழித்தடம் வழியாக வேளாங்கண்ணிக்கு செல்கின்றது.

ஆனால் இந்த ரயில் திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை வேளாங்கண்ணிக்கு இணைக்கவில்லை. இதற்கு முன்பு நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் மேசமான கால அட்டவணையில் இயக்கப்பட்டது. மோசமான கால அட்டவணையில் இயக்கப்பட்டதாலும் திருவனந்தபுரத்துடன் இணைப்பு இல்லாததாலும் இந்த ரயில் போதிய வரவேற்பு இல்லாமல் இடையே ரத்து செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

ரயில்வேதுறை அறிவிக்கும் சிறப்பு ரயில்கள் எல்லாம் ரயில்வேயில் உள்ள தொலைதூர இடங்களுக்கு இயங்கும் ரயில்களின் பெட்டிகள் ஒரு சில நாட்கள் காலியாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும் காலி ரயில் பெட்டிகளை கொண்டுதான் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. எனவே திருவனந்தபுரம், கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயன்படும் வகையில் கொச்சுவேளி அல்லது திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ரயில் அறிவித்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

இவ்வாறு திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கும் போது கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு பகுதியில் உள்ள ரயில் நிலையமான குழித்துறை, பாறசாலை, இரணியல் ரயில் நிலையங்கள் வழியாக பயணிக்கும் பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இது மட்டுமில்லாமல் சிறப்பு ரயில்களை இயக்குவது தொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு முழு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. ஆகவே வேளாங்கண்ணி கோவில் திருவிழாவை முன்னிட்டு கொச்சுவேளி அல்லது திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் டவுன் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயிலை அறிவித்து இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த கோரிக்கைக்கு பலன் கிடைக்குமா? என்று காத்திருந்து பார்ப்போம்.

பகல்நேர ரயில் இயக்க கோரிக்கை
திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மானாமதுரை, காரைகுடி, பட்டுகோட்டை, திருவாரூர் வழியாக வேளாங்கண்ணி பகல்நேரத்தில் செல்லதக்க சிறப்பு ரயிலையும் அறிவித்து இயக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் மிகவும் குறைவான நேரத்தில் குறைந்த தூரம் கொண்ட வழித்தடம் விழியாக வேளாங்கண்ணிக்கு பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடதக்கது.

The post கொச்சுவேளி அல்லது திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுமா? குமரி மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kochuveli ,Thiruvananthapuram ,Velangani ,Kumari District ,Velangani Mata Temple ,Nagapattinam district ,Southern Railway ,Venganchi ,Kumari District Commuter Expectation ,
× RELATED சிறுமி பலாத்காரம் செய்து எரித்துக்...