×
Saravana Stores

போனில் கடன் சொல்லி எடுத்த டிக்கெட்டுக்கு ₹75 லட்சம் பரிசு: கோவையை சேர்ந்தவருக்கு அதிர்ஷ்டம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் வினயகிருஷ்ணன். அங்குள்ள புதிய பஸ் நிலையம் அருகே லாட்டரிக் கடை வைத்து உள்ளார். அருகிலுள்ள நடுவண்ணூர் பகுதியை சேர்ந்த ராகேஷ்குமார் என்பவர் இவரது கடையில் அடிக்கடி டிக்கெட் வாங்குவது வழக்கம். இவர் கோவையிலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதி கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 2 தினங்களுக்கு முன் கோவையில் இருந்து வினயகிருஷ்ணனுக்கு போன் செய்த ராகேஷ்குமார், என்னென்ன லாட்டரி டிக்கெட்டுகள் உள்ளன என்று கேட்டுள்ளார். அப்போது ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் 18 டிக்கெட்டு விற்காமல் உள்ளது என்றும், சிறிது நேரத்தில் குலுக்கல் நடக்க உள்ளது என்றும் கூறியுள்ளார். உடனே 18 டிக்கெட்டுகளையும் தான் வாங்கிக் கொள்வதாகவும், ஊருக்கு வந்து பணம் தருவதாகவும் கூறியுள்ளார்.

அதன்படி 18 டிக்கெட்டுகளையும் வினயகிருஷ்ணன் மாற்றி வைத்துள்ளார். சிறிது நேரத்தில் குலுக்கல் நடந்தது. ராகேஷ்குமாருக்காக மாற்றி வைத்த ஒரு டிக்கெட்டுக்கு ₹75 லட்சம் முதல் பரிசு விழுந்தது. இந்த விவரத்தை வேண்டுமென்றால் ராகேஷ்குமாரிடம் சொல்லாமல் வினயகிருஷ்ணன் ஏமாற்றி இருக்கலாம். ஏனென்றால் டிக்கெட்டுகளின் எண்கள் குறித்த எந்த விவரமும் அவருக்குத் தெரியாது.

ஆனாலும் உடனடியாக ராகேஷ்குமாருக்கு போன் செய்த வினயகிருஷ்ணன், அவருக்காக மாற்றி வைத்த ஒரு டிக்கெட்டுக்கு ₹75 லட்சம் முதல் பரிசு விழுந்திருப்பதாக கூறினார். அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த ராகேஷ்குமார் மறுநாள் ஊருக்கு வந்து டிக்கெட்டை வாங்கிக் கொண்டார். லாட்டரிக் கடைக்காரர் வினயகிருஷ்ணனின் இந்த நேர்மையை அப்பகுதியைச் சேர்ந்த அனைவரும் பாராட்டினர். இது குறித்து அவர் கூறுகையில், வழக்கமாக என்னிடம் லாட்டரி வாங்குபவர்கள் தான் என்னை வாழ வைக்கின்றனர். அவர்களை ஏமாற்ற முடியாது என்றார்.

The post போனில் கடன் சொல்லி எடுத்த டிக்கெட்டுக்கு ₹75 லட்சம் பரிசு: கோவையை சேர்ந்தவருக்கு அதிர்ஷ்டம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Thiruvananthapuram ,Vinayakrishnan ,Kozhikode, Kerala ,Rakesh Kumar ,Madhuvannur ,
× RELATED பிளாஸ்டிக் குப்பையிலிருந்து பயணிகள்...