×

தேவதானப்பட்டியில் புதிய வாரச் சந்தை கட்டிடம்: பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை


பெரியகுளம்: தேவதானப்பட்டி பேரூராட்சியில் வாரச்சந்தை கட்டிடத்தை கட்டி மூன்றாண்டுகள் ஆகியும் திறக்கப்படாததால் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சி வளாகத்தில் வாரச்சந்தை கடைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும் தேவதானப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள், தேவதானப்பட்டி வாரச்சந்தைக்கு பொருட்கள் வாங்க வருகின்றனர்.

தேவதானப்பட்டியில் வாரம் ஒரு முறை புதன்கிழமை நாட்களில் மட்டும் நடைபெறும் வாரச்சந்தை கிராமப்புற மக்களுக்கு முக்கிய சந்தையாகும். இந்த சந்தையில் அனைத்து வகையான காய்கறி கடைகள், பழக்கடைகள் மற்றும் மளிகை கடைகள், விவசாய பொருட்களுக்கான மண்வெட்டி, அரிவாள், கடப்பாரை உள்ளிட்ட இரும்பு கடைகள் இயங்கி வருகிறது. இந்த வாரச்சந்தையில் கடந்த 2019-20 ஆண்டு 114 கடைகள் கட்டுவதற்கு, 1 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு, கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் முடிவடைந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வராததால் புதிய கட்டிடம் கட்டியும் சிரமத்தில் உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்காலிக வாரச்சந்தை, பேரூராட்சி அலுவலகத்தை ஒட்டி மரத்தடியில் திறந்தவெளியில் நடந்து வருகிறது. வாரச்சந்தை நடக்கும் போது மழை பெய்தால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுத்து தேவதானப்பட்டி வாரச்சந்தையின் புதிய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேவதானப்பட்டியில் புதிய வாரச் சந்தை கட்டிடம்: பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Periyakulam ,Dinakaran ,
× RELATED பெரியகுளம் அருகே சீலிங் ஃபேனில் சீறிய 6 அடி நீள பாம்பு