×

கொடைக்கானலில் பரபரப்பு; போதைக்காளானில் தேன் ஊற்றி ருசிப்பு: வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ


கொடைக்கானல்: கொடைக்கானலில் போதைக்காளான்களை சேகரித்து அதில் தேன் ஊற்றி ருசிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை குறி வைத்து, சமூக விரோத கும்பல் போதைக்காளான்களை விற்று வருகிறது. கொடைக்கானல் நகரம் மட்டுமின்றி மேல்மலை கிராமங்களான பூண்டி, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் போதைக்காளான், கஞ்சா விற்பனை நடப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். மேல்மலை பகுதியில் போதைக்காளான் பறிப்பது, அதில் தேன் ஊற்றி உண்பது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், போதைக்காளானை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? எந்த பகுதியில் தாராளமாக கிடைக்கும் என சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, ‘‘கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து போதை காளான், கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ஆபத்தை உணராமல் போதைக்காளான், கஞ்சாவை நுகரும் இளைஞர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி தங்களது வாழ்வை தொலைத்து விடுவர். எனவே, கொடைக்கானல் மலைப்பகுதியில் போதைக்காளான், கஞ்சா விற்பனையை தடுக்க சிறப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும்’’ என்றனர்.

The post கொடைக்கானலில் பரபரப்பு; போதைக்காளானில் தேன் ஊற்றி ருசிப்பு: வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul district ,Dinakaran ,
× RELATED கோபுர கலசம் விற்கும் ரைஸ்புல்லிங்...